தர்மபுரி எஸ்.பி. அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி: 14 பேர் கும்பல் மிரட்டுவதாக புகார்

தர்மபுரி: தர்மபுரி எஸ்பி அலுவலகத்திற்கு நேற்று மனு கொடுக்க வந்த விவசாயி  குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தர்மபுரி  மாவட்டம் பாலக்கோடு அருகே திருமல்வாடியை சேர்ந்தவர் காளப்பன் (37).  விவசாயி. இவரது மனைவி கலைச்செல்வி (35), தந்தை கோவிந்தன் (60), தாய் ராணி  (55), மகன் ரித்தீஷ் (10).

இவர்கள் அனைவரும் நேற்று தர்மபுரி எஸ்பி அலுவலகத்திற்கு மனு கொடுக்க  வந்திருந்தனர்.  அப்போது காளப்பன் திடீரென மறைத்து வைத்திருந்த கேனில்  இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து குடும்பத்தில் உள்ள அனைவர் மீதும் ஊற்றிவிட்டு தன் மீதும் ஊற்றி  தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட போலீசார் அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய்  கேனை பறிமுதல் செய்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர்.

இதையடுத்து காளப்பன் எஸ்பி  ராஜனிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு  அருகே திருமல்வாடி கிராமத்தில் நாங்கள் குடும்பத்தோடு வசித்து வருகிறோம்.  எங்கள் குடும்பத்தினர் பல வருடங்களாக அதே பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு  நிலம் 1.5 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலத்திற்கு ஊர் பிரமுகர்களிடம் வரியும் கட்டி வருகிறோம். இந்தநிலையில் எங்கள் கிராமத்தை சேர்ந்த 14 பேர் கொண்ட கும்பல் கடந்த 20ம் தேதி  காலை 10 மணிக்கு வீட்டுக்கு வந்து என்னிடம், புறம்போக்கு நிலத்தில் நீ விவசாயம் செய்யக்கூடாது என தடுத்தனர்.  

மேலும் நிலத்திலிருந்து காலி செய்ய வேண்டும் என மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து கடந்த 21ம் தேதி மீண்டும் அதே 14 பேர் கொண்ட கும்பல் என்னையும் என் குடும்பத்தினரையும் தாக்கினர்.  பின்பு நிலத்தில் இருந்த கிணறு, மோட்டார், மரங்கள், தக்காளி செடிகள், வாழை, மற்றும் தீவனப் பயிர்களை அழித்து நாசம் செய்தனர். எனவே எங்களை மிரட்டி தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்கும் என் குடும்பத்தாருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: