பரமத்திவேலூர் அருகே சோகம் காவிரியில் மூழ்கி 6 பேர் பலி

பரமத்திவேலூர்:  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகேயுள்ள பொத்தனூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் சரவணன் (42). புகைப்பட கலைஞர். இவரது மனைவி ஜோதி(35). இவர்களுக்கு 10 வயதில் தீபகேஷ், தாரகேஷ் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். பள்ளி விடுமுறையையொட்டி, உறவினரான தேவி(30), அவரது மகள் ஹஸ்திகா(5) மற்றும் சரவணனின் அண்ணன் மகன் ரோகித் (14) ஆகியோருடன் சரவணன் குடும்பத்தினர், பொத்தனூர் காவிரியில் குளிக்க நேற்று காலை 9 மணிக்கு  வந்தனர்.

இங்கு, கரூர் மாவட்டம் புகலூர் பகுதியில் உள்ள காகித ஆலைக்கு தண்ணீர் எடுத்து செல்ல, 20 அடி ஆழத்தில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. அதில் குளிப்பதற்காக 7 பேரும் சென்றனர். தண்ணீரை பார்த்ததும் சிறுவர்கள் வேகமாக குதித்தனர். இதில், அவர்கள் மணலில் சிக்கியதாக தெரிகிறது. இதையடுத்து, அவர்களை மீட்பதற்காக ஒருவர் பின் ஒருவராக சரவணன், ஜோதி, தேவி ஆகியோர் ஆற்றில் குதித்தனர். ரோகித் மட்டும் கரையிலேயே நின்று கொண்டான். அந்த பகுதி ஆழமாக இருந்ததால் அனைவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.

இதை பார்த்த ரோகித் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் ஓடிச் சென்று தகவல் தெரிவித்தான். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் பரமத்திவேலூர் போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து, ஆற்றில் மூழ்கியவர்களை தேடினர். இதில் சரவணன், ஜோதி, தேவி, தீபகேஷ் மற்றும் தாரகேஷ் ஆகியோரை சடலமாக மீட்டனர். தேவியின் மகள் ஹஸ்திகாவை இரவு 8 மணி வரை தீயணைப்பு வீரர்கள் தேடினர். பின்னர் தேடும் பணியை நிறுத்தி விட்டனர். இன்று காலை மீண்டும் தேடும் பணி நடக்கிறது. மீட்கப்பட்ட சடலங்களை பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, பரமத்திவேலூர்  எம்.எல்.ஏ. மூர்த்தி கூறுகையில், தமிழ்நாடு காகித ஆலைக்கு தண்ணீர் எடுத்து செல்ல குட்டை போல் அமைத்து தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. காவிரியை திசை திருப்பி இதுபோல தண்ணீர் தேக்கியுள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் நீரில் மூழ்கி 6பேர் இறந்துள்ளனர். தண்ணீர் இல்லாதபோது காவிரியில் அதிகளவில் மணல் அள்ளியதால் தற்போது தண்ணீர் வந்ததும் புதை மணல் உருவாகியுள்ளது. இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றார். பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா 1 லட்சம் நிவாரண உதவியாக வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: