பராமரிப்பு பணிகளை கண்காணிக்க நிபுணர் குழு ஸ்டெர்லைட் ஆலை கோரிக்கை நிராகரிப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை கண்காணிக்கக் கோரிய ஆலையின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.  தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் நோய் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் கடந்த ஆண்டு பெரிய அளவில் போராட்டங்களை நடத்தினர்.

இந்த போராட்டத்தின் ஒரு கட்டமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் கடந்த 2018 மே 22ம் தேதி நடந்தது. இந்த  போராட்டம் பின்னர் கலவரமாக வெடித்தது. போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு மே 28ல் சீல் வைத்து மூடியது. ஆலைக்கு வழங்கப்பட்ட குடிநீர் மற்றும் மின்சார இணைப்புகளை துண்டிக்கப்பட்டன.

 ஆலையை மூடிய உத்தரவை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ஓய்வுப் பெற்ற நீதிபதியை கொண்டு ஆய்வு செய்து அறிக்கையை பெற்றது. அதன் பின்னர், ஆலையை திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தது.

மேலும், ஸ்டெர்லைட் நிறுவனம் நிவாரணம் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணையில் உள்ளது. வழக்கு நேற்று மீண்டும்  விசாரணைக்கு வந்தது.

அப்போது,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாதிடும்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆரம்பத்திலிருந்தே வழக்கு தொடர்ந்தவன் நான். உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும்போது என்னையும் வழக்கில் சேர்த்தனர். எனவே, இந்த வழக்கில் என்னையும் சேர்க்குமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆரியமா சுந்தரம் வாதிடும்போது, ஆலையின் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் நிபுணர்களைக்கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று கோரினார்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிடும்போது, ஏற்கனவே தமிழக அரசு ஒரு நிரந்தர குழுவை அமைத்து ஆலையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. புதிதாக ஒரு கமிட்டி தேவையில்லை என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே இந்த வழக்கில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தனியாக குழு அமைக்க உத்தரவிட முடியாது.

மேலும், இந்த வழக்கில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் 40 இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை எல்லாம் விசாரணைக்கு ஏற்ப குறித்து முடிவு செய்த பின்னரே, பிரதான வழக்கை விசாரணைக்கு எடுக்க முடியும். எனவே, இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 11ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

அப்போது, ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், ஆலையை மூடி ஓர் ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அங்கு பணியாற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்றார். அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள் விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: