ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2ம் நாளில் இந்தியா அசத்தல்: 2 தங்கம் உட்பட 5 பதக்கம் அள்ளியது

தோஹா: கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 2ம் நாளில் இந்திய அணி 2 தங்கம் உட்பட 5 பதக்கங்களை வென்று அசத்தியது.தொடக்க நாளில் 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்த இந்திய அணிக்கு, தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து மகளிர் 800 மீட்டர் ஓட்டத்தில் முதல் தங்கப் பதக்கத்தை வென்று உற்சாகமளித்தார். அவர் 2 நிமிடம், 02.70 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். இது கோமதியின் சிறப்பான செயல்பாடாகவும் அமைந்தது.

ஆண்கள் குண்டு எறிதல் போட்டியில் களமிறங்கிய இந்திய வீரர் தேஜிந்தர்பால் சிங் தூர், முதல் சுற்றிலேயே 20.22 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார்.

ஆண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவின் ஷிவ்பால் சிங் 86.23 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியதுடன், தோஹாவில் செப்டம்பர் - நவம்பரில் நடைபெற உள்ள உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவும் தகுதி பெற்றார்.  ஆண்கள் மற்றும் மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியாவின் ஜபிர் மடாரி, சரிதாபென் கெயக்வாட் வெண்கலம் வென்றனர். இந்திய அணி இதுவரை 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 3வது இடம் பிடித்துள்ளது. சீனா (15), பஹ்ரைன் (9) அணிகள் தலா 4 தங்கப் பதக்கங்கங்களுடன் முதல் 2 இடங்களில் உள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: