சீன கடற்படை விழாவில் ஐஎன்எஸ் கொல்கத்தா: இந்திய போர் கப்பல்கள் அணிவகுப்பு

பீஜிங்: சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற சீன கடற்படையின் 70ம் ஆண்டு விழா அணிவகுப்பில் ஐஎன்எஸ் கொல்கத்தா உள்ளிட்ட இந்திய போர் கப்பல்கள் பங்கேற்றன.பீஜிங்கில் சீன கடற்படையின் 70ம் ஆண்டு விழா அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் நேற்று நடந்தது. இதனையொட்டி போர் கப்பல்களின் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதில் சீன கடற்படையின் 32 போர் கப்பல்கள் 6  பிரிவுகளாக அணிவகுத்து சென்றன. அதேபோல், கடற்படையின் 39 போர் விமானங்களும் 10 பிரிவுகளாக அணிவகுத்து வானில் சாகசம் புரிந்தன. இந்த அணிவகுப்பில் முன்னாள் சோவியத் யூனியனால் வடிவமைக்கப்பட்ட சீனாவின் முதல் விமானம் தாங்கி போர் கப்பல் முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல், போர் விமானங்கள் வரையிலான தற்போதைய நவீன போர்  தளவாடங்களை சீனா பார்வைக்கு நிறுத்தியது. ஆனால் வானம் மேக மூட்டமாக இருந்ததால் பார்வையாளர்கள் இவற்றை சரியாக கண்டு களிக்க முடியவில்லை.

இந்த அணிவகுப்பில் ஐஎன்எஸ் கொல்கத்தா, ஐஎன்எஸ் சக்தி ஆகிய இரண்டு இந்திய போர் கப்பல்கள் கலந்துகொண்டன. ஐஎன்எஸ் கொல்கத்தா ஆதித்ய ஹரா தலைமையில் அணிவகுத்து சென்றது. இதில் பிரமோஸ் உள்ளிட்ட இந்தியாவின் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் பார்வைக்கு நிறுத்தப்பட்டிருந்தன. சீனாவின் மிக நெருங்கிய கூட்டாளியான  பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் போர் கப்பல்கள் எதுவும் இதில் பங்கேற்கவில்லை. அதே சமயம், ரஷ்யா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட 13 நாடுகளை சேர்ந்த 18 போர் கப்பல்கள் கலந்துகொண்டன. இதன் மூலம் இந்தியா-சீனா இடையிலான கடல்வழி ராணுவ ஒத்துழைப்பு மேம்படும் என்று சீன அதிகாரிகள்  தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: