×

உபகரணங்களை உடைத்து ரகளை பெதஸ்தா பூங்காவில் போதை கும்பல் அட்டூழியம்: பெண்கள், குழந்தைகள் அச்சம்

நாகர்கோவில்: நாகர்கோவில் பெதஸ்தா பூங்காவில் போதை கும்பல் அட்டூழியத்தால் அங்கு வரும் குழந்தைகள், பெண்கள் அச்சம் அடைந்துள்ளனர்.நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான பெதஸ்தா வணிக வளாகத்தின் பின்பகுதியில் சிறுவர் பூங்கா உள்ளது.  இன்டாக் அமைப்பு பூங்காவை பராமரித்து வருகிறது. மாலை வேளையில் ஏராளமானவர்கள் பொழுதுபோக்கிற்காக வந்து செல்கிறார்கள். சிறுவர்கள் விளையாடுவதும் வழக்கம். குழந்தைகளுக்கான சிறிய ராட்டினங்கள், ஊஞ்சல் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் சமீப காலமாக போதை ஆசாமிகளின் புகலிடமாக இந்த பூங்கா மாறி உள்ளது. மாலையில் இருந்து இரவு வரை சுமார் 20 பேர் கொண்ட கும்பல் இந்த பூங்காவிற்குள் பைக்குகளில் வந்து கஞ்சா அடிப்பது, போதை ஊசி போடுவது என சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். போதை தலைக்கேறியதும் பூங்காவில் உள்ள குடிநீர் தொட்டி, ராட்டினங்கள் மற்றும் பாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி போலீசாருக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தற்போது இன்டாக் அமைப்பு சார்பில் இது பற்றி எஸ்.பி., டி.ஐ.ஜி.க்கு புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி இன்டாக் அமைப்பாளர் லால்மோகன் கூறுகையில், மாநகராட்சிக்கு சொந்தமான இந்த சிறுவர் பூங்காவை இன்டாக் அமைப்பு சார்பில் பராமரித்து வருகிறோம். ஏற்கனவே போதை கும்பல் அட்டகாசம் இருந்தது. இதுபற்றி உரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து சமூக விரோத செயல்களை தடுத்து இருந்தோம். தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் போதை பொருள் பயன்படுத்தும் கும்பல் வந்து ரகளையை தொடங்கி விடுகின்றனர். இவர்களின் மிரட்டலுக்கு பயந்து இங்கு விளையாட வரும் இளைஞர்கள், மாணவர்கள் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே இது தொடர்பாக காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : children ,Bethesda Park: Women , Bethesda Park, drug gang, atrocity, women and children
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...