மலைக்கு திரும்பினார் கள்ளழகர்: நாளை உற்சவ சாந்தி

மதுரை: வைகை ஆற்றில் இறங்க மதுரை வந்த கள்ளழகர், இன்று மீண்டும் மலைக்கு திரும்பினார். நாளை உற்சவ சாந்தியுடன் அழகர் கோயில் சித்திரை திருவிழா நிறைவுபெறுகிறது. மதுரையில் சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கடந்த 19ம் தேதி நடந்தது. நேற்று அதிகாலை 2.30 மணிக்கு கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி மதுரை நகரில் விடிய, விடிய பக்தர்களுக்குக் காட்சியளித்தார். பின்பு தல்லாகுளத்தில் இருந்து பெருமாள் கோயில் சென்றார். ஒவ்வொரு மண்டகப்படியாகச் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து விட்டு, மீண்டும் மலையை நோக்கி புறப்பட்டார்.

காலை 8 மணிக்கு அம்பலகாரர் மண்டபத்தில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் 10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகரை புதூர், மூன்றுமாவடி வழியாக சென்றார். இன்று அதிகாலை 3 மணிக்கு அப்பன்திருப்பதி சென்றடைந்த அழகரை, பக்தர்கள் திரளாக காத்திருந்து தரிசனம் செய்தனர். காலை 5 மணிக்கு அப்பன்திருப்பதியில் புறப்பட்ட அழகர் 7 மணிக்கு கள்ளந்திரியை அடைந்தார். அங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை தரிசித்தனர். தொடர் மண்டகப்படிகளில் காட்சி தந்த அவர், இன்று காலை 10.30 மணிக்கு மேளதாளம் முழங்க மலைக்கு வந்து சேர்ந்தார். பக்தர்கள் பூசணிக்காயில் சூடம் ஏற்றி திருஷ்டி சுற்றி, கோயில் வளாகத்திற்குள் கள்ளழகரை அழைத்து சென்றனர். நாளை காலை உற்சவ சாந்தியுடன் மதுரையின் பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழா நிறைவடைகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: