அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதே தீவிரவாதிகளின் நோக்கமாக இருந்திருக்கிறது: குண்டுவெடிப்பு குறித்து இலங்கை பிரதமர் ரணில் விளக்கம்

கொழும்பு: குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இலங்கை பிரஜைகள் ஆவர் என்று இலங்கை பிரதமர் ரணில் பேட்டி அளித்துள்ளார். உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை நேற்று  கொண்டாடப்பட்டது. இலங்கையில் கிறிஸ்தவர்கள் நேற்று முன்தினம் பல்வேறு தேவாலயங்களில் திரண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் காலை 8.45 மணியளவில் கொழும்புவின் கோச்சிகடே  பகுதியில் உள்ள செயின்ட் அந்தோணி புனித தேவாலயத்தில் முதல் குண்டு வெடித்துச் சிதறியது. அதே நேரம், புறநகரான நெகோம்போ பகுதியில் உள்ள செயின்ட் செபாஸ்டியன்  தேவாலயம், தமிழர்கள் அதிகம் வசிக்கும்  மட்டக்களப்பில் உள்ள ஜியான் தேவாலயங்களிலும் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துச் சிதறின.

இதுதவிர கொழும்பில் உள்ள பிரபலமான மூன்று 5 நட்சத்திர ஓட்டல்களிலும் வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. இதில், தேவாலயங்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த மக்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர்.  உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த பயங்கர வெடிகுண்டு தாக்குதலில்  321 பேர் பலியாகி உள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி   எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இலங்கையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் இதுவரை 45 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. வதந்திகள் பரவுவதை தடுக்க  முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. இலங்கை தொடர் குண்டுவெடிப்பு குறித்து சர்வதேச புலனாய்வு அமைப்பான இண்டர்போல் தனது விசாரணையை  தொடங்கியுள்ளது.

குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரையும் இழப்பீடாக வழங்கப்படும் என இலங்கை  அரசு  அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்ட இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் ரஜிதா சேனரத்னே இறந்தவர்களின் இறுதிச்சடங்குகளுக்காக கூடுதலாக ஒரு லட்சம் ரூபாயும்  வழங்கப்படும்  என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் அமக் என்ற செய்தி நிறுவனம் தங்கள் அமைப்பு  குண்டுவெடிப்பை நடத்தியதாக ஒப்புக் கொண்டது.

தொடர் குண்டுவெடிப்பு குறித்து இலங்கை பிரதமர் ரணில் விளக்கம்:

இந்நிலையில், இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே விளக்கம் அளித்துள்ளார். நியூசிலாந்தில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியா என்று தற்போது கூற முடியாது   என்று தெரிவித்தார். இலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நபர்கள் குறித்த விசாரணையில் நல்ல முன்னேற்றம்; நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாக கூட இருக்கலாம், உறுதியான தகவலை போலீசார்தான்  கூற வேண்டும் என்றார். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேசிய துக்கத் தினம் அனுசரிக்கப்பட்டது. குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இலங்கை பிரஜைகள், வெளிநாட்டினர்  யாரையும் கைது செய்யவில்லை என்றார்.

குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் அனைவரும் தற்கொலைப்படை தீவிரவாதிகள், அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதே தீவிரவாதிகளின் நோக்கமாக இருந்திருக்கிறது என்றும் விசாரணைக்கு வெளிநாட்டு உதவியை இலங்கை  கேட்டு உள்ளது என்றார். நாட்டில் உள்ள பல்வேறு மதங்களுக்கு இடையே நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு நடந்தபோது மீட்புப்பணியில் அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து செயல்பட்டனர், இலங்கை மக்கள்  யாரும் சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தியிருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: