மதுரை மத்திய சிறையில் காவல்துறையினரை கண்டித்து மதில்சுவரில் ஏறி கைதிகள் போராட்டம்

மதுரை : மதுரை மத்திய சிறையில் காவல்துறையினருக்கும், கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் சிறையின் மதில்சுவர் மீது ஏறி நின்று கைதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை மத்திய சிறையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் தனித்தனியாக அடைத்து வைத்துள்ளனர். இந்நிலையில் சிறைகளில் கைதிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக கூறி காவல்துறையினரை கண்டித்து சிறை கட்டிடத்தின் மேல் தளத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் மானபங்கப்படுத்துவதாகவும், கொடுமை செய்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை கண்டித்து கற்களை சாலைகளில் வீசி கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். மேலும் சட்டையை கழட்டி தொடர்ந்து கற்களை வீசி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நூறுக்கும் மேற்பட்ட கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்த முயன்றும் தொடர்ந்து அவர்கள் கற்களை வீசி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சிறையை சுற்றிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நீதிபதிகள் தலைமையிலான குழு அல்லது பத்திரிக்கையாளர்கள் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறையில் நடைபெற்ற சோதனையின் போது 2 கைதிகளை காவல்துறையினர் அழைத்து சென்ற போது மற்ற கைதிகள் தடுத்ததால் மோதல் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: