மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் நடிகர் சன்னி தியோல்

அமிர்தசரஸ்: பாலிவுட் நடிகர் சன்னி தியோல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை பாஜ கூட்டணியில் உள்ள அகாலி தளம் மிகவும் பலவீனமாக உள்ளது. பாஜ சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் பலமானவர்களாக, மக்களுக்கு அறிமுகமானவர்களாக இல்லாததால், அம்மாநிலத்தில் பாஜ பலவீனமாக  இருக்கிறது. இளைய தலைமுறையை சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்தீப் புரி, இந்தி சினிமா சூப்பர் ஸ்டாரான தர்மேந்திராவின் மகன் சன்னி தியோல், மற்றொரு பிரபல ஹீரோவான வினோத் கண்ணாவின் மகன் அக்சை கண்ணா ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க கோரிக்கை எழுந்தன. ஆனால், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சராக உள்ள ஹர்தீப் சிங் புரிக்கு அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட சீட்  வழங்கவில்லை.

அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட நடிகர் சன்னி தியோலுக்கும் சீட் மறுக்கப்பட்டால், ஹர்தீப் சிங்குக்காவது சீட் கொடுக்க வேண்டும் என்று மாநில பாஜ நிர்வாகிகள் தெரிவித்தனர். சன்னி தியோல், பிகானர் தொகுதி பாஜ முன்னாள் எம்பியும், பிரபல பாலிவுட் நடிகருமான தர்மேந்திராவின் மகன். இவரது சித்தியான ஹேமமாலினி தற்போது உத்தரபிரதேசத்தின் மதுரா தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை, அமிர்தசரஸ் தொகுதிக்கு  வேட்பாளராக அறிவிக்க பாஜ விரும்பிய நிலையில், ஹேமமாலினி மதுராவில் தான் போட்டியிடுவேன் என்று கூறி கைவிரித்துவிட்டார். கடைசி நேரத்தில் ஹேமமாலினியும் மறுத்து விட்டதால், கட்சி தலைமை பாஜவில்  இணைந்த முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரி ஹர்தீப் புரியை அமிர்தசரசில் போட்டியிட அணுகிய போது, அவரும் தான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டார். அதனால், அமிர்தசரஸ் தொகுதிக்கு வெற்றி  வேட்பாளரை தேர்வு செய்வது பெரும் சவாலாகவே உள்ளது. இந்நிலையில் தர்மேந்திராவின் மூத்த மகன் சன்னிதியோல் (62),கடந்த சில நாட்களுக்கு முன் பாஜ தேசிய தலைவர் அமித்ஷாவை புனே விமான நிலையத்தில் சந்தித்தார். அதன்  புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாயின.

அப்போது, ‘அமிர்தசரஸ் மக்களவை தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட வேண்டும்’ என சன்னிதியோலை அமித்ஷா வலியுறுத்தியதாகவும் செய்திகள் வெளியாயின. இதனை மறுத்துள்ள சன்னிதியோல், ‘‘செய்தி வெறும்  வதந்தி தான், மரியாதை நிமித்தமாக தான் அமித்ஷாவை சந்தித்தேன். இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம் அவ்வளவு தான். அரசியலில் எனக்கு விருப்பமில்லை’’ என்றார். இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் முன்னிலையில் சன்னி தியோல் பாஜகவில் இன்று இணைந்தார். சன்னி தியோல், பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: