இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

கொழும்பு : இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் அமக் என்ற செய்தி நிறுவனம் தங்கள் அமைப்பு குண்டுவெடிப்பை நடத்தியதாக ஒப்புக் கொண்டது.

 

உலகை உலுக்கிய இலங்கை தாக்குதலின் இதுவரை நடந்தது என்ன ?

*இலங்கையில் ஞாயிறன்று 3 தேவாலயங்கள், 4 நட்சத்திர விடுதிகள், ஒரு வீடு என 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 321 ஆக உயர்ந்துள்ளது.

*500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

* இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலை தொடர்ந்து இன்று அங்கு தேசிய துக்க தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

*தொடர் குண்டுவெடிப்பால் இலங்கை மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த நிலையில் சூழலை கட்டுக்குள் கொண்டு வர அங்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

*இதனிடையே  குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடையவர்களை நீதிமன்ற உத்தரவின்றி கைது செய்ய முப்படை வீரர்களுக்கு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

*முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வதந்திகள் பரவுவதை தடுக்க முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.

*இலங்கை தொடர் குண்டுவெடிப்பு குறித்து சர்வதேச புலனாய்வு அமைப்பான இண்டர்போல் தனது விசாரணையை தொடங்கியுள்ளது.

*உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

*இலங்கையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் இதுவரை 45 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

*நியூசிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதியிலும், லின்உட் மஸ்ஜித் மசூதியிலும் பயங்கரவாதிகள் கடந்த 15ந்தேதி துப்பாக்கிச்சூடு நடத்தி 49 பேரை கொன்று குவித்தனர்.இந்த தாக்குதலில் ஏராளமானோர் படுகாயமும் அடைந்தனர். நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இலங்கை தேவாலயங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் ரூவன் விஜிவார்தினே தெரிவித்துள்ளார்.

*இந்த தாக்குதலின் பின்னணியில் இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அந்நாட்டின் அமைச்சர்கள் அனைவரும் தெரிவித்துள்ளனர்.

*இலங்கை குண்டு வெடிப்புக்கு காரணமான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கும் தமிழகத்துக்கும் தொடர்பு இல்லை என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில துணைப் பொதுச்செயலாளர் அப்துல் ரஹீம் விளக்கம் அளித்துள்ளார்.

*இந்நிலையில் குண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு வேன், ஒரு லாரி மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் கொழும்பு நகருக்குள் நுழைந்திருப்பதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. புலனாய்வு அதிகாரிகளின் தகவலை தொடர்ந்து

அனைத்து காவல் நிலையங்களும் உஷாராக இருக்குமாறு இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

*சந்தேகத்துக்குரிய அந்த வாகனங்களின் பதிவு எண்களை வைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

*கொழும்பு துறைமுக காவல்நிலையத்தில் இருந்து இலங்கையின் மற்ற காவல்நிலையங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்றது.

*கொழும்பு நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. கொழும்பு துறைமுக நுழைவாயில் உட்பட அனைத்து பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

*சந்தேகத்துக்குரிய வாகனங்களின் நடமாட்டம் தொடர்பாக 116 என்ற ஹாட்லைன் எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

*இந்நிலையில் இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் அமக் என்ற செய்தி நிறுவனம் தங்கள் அமைப்பு குண்டுவெடிப்பை நடத்தியதாக ஒப்புக் கொண்டது.

*ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்ற போதும் எந்த ஆதாரங்களையும் தீவிரவாத அமைப்பு வெளியிடவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: