கோடை விடுமுறையில் பணிக்கு வராத அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை : பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை : கோடை விடுமுறையில் பணிக்கு வராத அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் ஜூன் 2ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஜூன் 3ம் தேதி வழக்கம் போல பள்ளிகள் தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பள்ளி திறந்த முதல் நாளில் மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் கோடை விடுமுறை நாள்களில் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும், மாணவர்களுக்கு ஓய்வு தேவை என்பதாலும் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியர் அனைவரும் கோடை விடுமுறையில் பணிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், புதிய மாணவர் சேர்க்கை, மறு தேர்வு உள்ளிட்ட பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் என்றும் அலுவல் நாட்கள் தவிர வேறு நாட்களில் விடுப்பு தேவைப்பட்டால் வட்டாரக்கல்வி அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அலுவலக நேரத்தில் காரணமின்றி பள்ளிக்கு வராமல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: