நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாது ஏன்?..போக்குவரத்து செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: 2005ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை இதுவரை அதிகாரிகள் அமல்படுத்தாதது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ள உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், போக்குவரத்து துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். மதுரையை சேர்ந்த வீரமணி என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு கிராமப்புற மக்களின் போக்குவரத்து சேவையை பூர்த்தி செய்யும் விதமாக மினி பஸ் திட்டத்தை கொண்டு வந்தது. இதில் அந்தந்த மாவட்ட போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் பேருந்து இயக்கும் உரிமையாளர்கள் விண்ணப்பம் செய்யலாம் என கூறப்பட்டிருந்தது.

Advertising
Advertising

அதாவது அந்தந்த மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களுக்கு மினி பஸ் இயக்க, அங்குள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது மதுரை மாவட்டத்திற்காக மட்டும் 81 விண்ணப்பங்கள் போக்குவரத்து மண்டல அலுவலகத்திற்கு வந்திருந்தது.விண்ணப்பம் செய்தவர்களில் 18 பேரின் விண்ணப்பங்களை மட்டும் தமிழக அரசு தகுதியுடையது என கூறி ஏற்றுக்கொண்டது. ஆனால், அவர்களுக்கு மினி பஸ் இயக்குவதற்கான உரிமம் வழங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, அந்த 18 பேரும் உயர்நீதிமன்ற கிளையை நாடினர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மதுரை முழுவதும் மினி பேருந்துகளை இயக்க தகுதியுடைய 18 பேருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், இந்த உத்தரவானது 14 ஆண்டுகளாகியும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆகவே, நீதிமன்ற உத்தரவை மீறியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நிர்வாக நீதிபதி கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 2005ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை இதுவரை அதிகாரிகள் அமல்படுத்தாதது ஏன்? எனவும், இந்த உத்தரவை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எனவும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். மேலும், இதுகுறித்து போக்குவரத்து துறை செயலாளர் நாளை நேரில் ஆஜராக விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை நாளைய தினத்துக்கு ஒத்திவைத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: