நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இலங்கை வெடிகுண்டு தாக்குதல் : பாதுகாப்புத் துறை அமைச்சர் ரூவன் விஜிவார்தினே

கொழும்பு : நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இலங்கை தேவாலயங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் ரூவன் விஜிவார்தினே தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கான காரணம் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மார்ச் 15ம் தேதி நியூசிலாந்தின் கிறைஸட்சர்ச் நகரில் 2 மசூதிகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இலங்கையில் கொடூர தாக்குதல்

இலங்கையில் ஞாயிறன்று 3 தேவாலயங்கள், 4 நட்சத்திர விடுதிகள், ஒரு வீடு என 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது. 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.6 இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து நாட்டின் மசூதியில் துப்பாக்கி சூடு

நியூசிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதியிலும், லின்உட் மஸ்ஜித் மசூதியிலும் பயங்கரவாதிகள் கடந்த 15ந்தேதி துப்பாக்கிச்சூடு நடத்தி 49 பேரை கொன்று குவித்தனர்.இந்த தாக்குதலில் ஏராளமானோர் படுகாயமும் அடைந்தனர்.

நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இலங்கை தாக்குதல்

இந்நிலையில் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இலங்கை தேவாலயங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் ரூவன் விஜிவார்தினே தெரிவித்துள்ளார். இதோடு தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட இரண்டு இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் தான் இந்த தாக்குதலுக்கு பொறுப்பு எனவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

முன்னாள் தூதரக அதிகாரி

பல நாடுகளுக்கான இந்திய தூதராகத்தில் இருந்த ஜி. பார்த்தசாரதி, ஈஸ்டர் அன்று கிறிஸ்தவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தனது பார்வையில் நியூசிலாந்து மசூதியில் தொழுகை நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பழி வாங்கும் நடவடிக்கை என்கிறார். மேலும் இலங்கையிலிருந்து யாரும் சிரியாவுக்கோ ஈராக்குக்கோ சென்று ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்ததற்கோ, அவர்களது பயிற்சியில் இணைந்ததற்கோ ஆதாரம் எதுவும் இல்லை என்றும் ஆனால் குறிவைக்கப்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதாலும், குண்டு வெடிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நேரம் கிறிஸ்தவர்களின் புனித பண்டிகை நாள் என்பதாலும் இந்த தாக்குதல் நியூசிலாந்து மசூதிகளில் கொல்லப்பட்டவர்களுக்காக பழிவாங்கும் செயல் என்றே தோன்றுகிறது என்றும் கூறினார்.

 தாக்குதலின் பின்னணியில் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பா ?  

இந்த தாக்குதலின் பின்னணியில் இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அந்நாட்டின் அமைச்சர்கள் அனைவரும் தெரிவித்துள்ளனர்.

தொடர் குண்டு வெடிப்புகளில் சம்பந்தப்பட்ட 30 பேரை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தீவிர உறுப்பினர் ஆவார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சர்வதேச அளவில் சதிவலை பின்னப்பட்டு இந்த தாக்குதல் நடந்து இருப்பதாக தெரிய தொடங்கி இருக்கிறது. இந்த தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் உறுப்பினர்கள் தான் அனைத்து உதவிகளையும் செய்து இருக்கிறார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது. தாக்குதலை திட்டமிட்டு நடத்தியது ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்று தெரிய வந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: