பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனம் கோரிக்கை நிராகரிப்பு

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்குமாறு வேதாந்தா நிறுவனம் விடுத்த கோரிக்கையை மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டிருந்தது. இதனை ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்க தனி குழு அமைக்க வேண்டும் என்கிற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

வழக்கு கடந்து வந்த பாதை

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்ததா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஓய்வுபெற்ற ஐகோர்ட் தலைமை நீதிபதி தருண் அகர்வால் குழு அளித்த அறிக்கை அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிறுத்தி வைத்ததை தொடர்ந்து, வேதாந்தா குழுமம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்றும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதித்தும் உத்தரவிட்டது. வழக்கை சென்னை ஐகோர்ட்டில்  மனு தாக்கல் செய்து சந்திக்க வேதாந்தா குழுமத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.

வேதாந்தா குழுமம் சார்பில் மனு

இந்நிலையில் வேதாந்தா குழுமம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலையை மூட கடந்த ஆண்டு மே 28ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அடுத்த 5 வருடத்துக்கு ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தேவையான அனுமதி, உரிமம், சான்றிதழ்களை வழங்க தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய பசுமை பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் மற்றும் தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆகியோர் வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், தமிழக அரசு, மாசுகட்டுப்பாட்டு வாரியம், தமிழக காவல்துறை இயக்குநர் ஆகியோர் இந்த வழக்கில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை இன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்.

வேதாந்தா குழுமம் கோரிக்கை நிராகரிப்பு

இந்நிலையில் கடந்த மார்ச் 27-ம் தேதி வழக்கு விசாரணையில் பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்யத மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது. மேலும் ஆலையை திறக்காததால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வேதாந்தா நிறுவனம் தனது மனுவில் தெரிவித்து இருந்தது.

தமிழக அரசு ஆய்வு செய்ய உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், பராமரிப்புப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும் தூத்துக்குடியில் ஆலையை மூடிய பிறகு சுற்றுசூழல் மற்றும் நிலத்தடி நீரின் தரம் உயர்ந்துள்ளதா என்பது குறித்து தமிழக அரசு ஆய்வு மேற்கொள்ளவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு தொடர்பான விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி சத்தியநாராயணன், நிர்மல்குமார், ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஆலை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்ய போதிய குழு அமைக்கவில்லை வேதாந்தா நிறுவனம் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அப்போது, ஏற்கனவே கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய தமிழக அரசின் வாதத்தை ஏற்று வேதாந்தாவின் கோரிக்கையை சென்னை ஐகோர்ட் நிராகரித்தது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரிய வழக்கின் விசாரணையை ஜூன் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: