ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்றுத்தந்தார் தமிழக வீராங்கனை கோமதி

தோஹா: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது.

தொடக்க நாளிலேயே 5 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்

 

கத்தார் நாட்டின் தோகா நகரில் 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய அணி தொடக்க நாளிலேயே 5 பதக்கங்களை வென்று அசத்தியது. மகளிர் ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னு ராணி 60.22 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்கள் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் அவினாஷ் சப்லே 8 நிமிடம், 30.19 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கத்தை முத்தமிட்டார். மகளிர் 400 மீட்டர் ஓட்டத்தில் எம்.பி.பூவம்மா, மகளிர் 5000 மீட்டர் ஓட்டத்தில் பருல் சவுதாரி, ஆண்கள் 10000 மீட்டர் ஓட்டத்தில் கவித் முரளி குமார் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

இந்தியாவிற்கு முதல் தங்கம்

இந்நிலையில் நேற்று பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் கோமதி மாரிமுத்து, பந்தய தூரத்தை 2 நிமிடம் 4.96 வினாடிகளில் கடந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில் 2ம் நாளான இன்று இறுதி சுற்று 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து 2 நிமிடம் 2 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமையை சேர்த்துள்ளார்.

ஆரம்பத்தில் கோமதி சற்று பின் தங்கி இருந்தார். பின்னர் தனது அபார ஓட்டத்தினால் சீன வீராங்கனை வாங் சுன்யு வை தோற்கடித்தார்.  திருச்சி மணிகண்டன் பகுதியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தேசிய அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: