பொள்ளாச்சியை போல பெரம்பலூரில் கொடூர சம்பவம் மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய அதிமுக பிரமுகர் சிக்கினார்: மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

பெரம்பலூர்: பொள்ளாச்சியை போன்று, கல்லூரி, திருமணமான பெண்களை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரத்தில், அதிமுக முக்கிய பிரமுகர் மற்றும் போலி நிருபர் உள்ளிட்ட பலர் மீது பெரம்பலூர் மகளிர் போலீசார்  வழக்கு பதிந்துள்ளனர்.பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. திஷாமித்தலிடம் கடந்த 21ம்தேதி வக்கீல் அருள் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது: பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டு பாலியல் பலாத்காரம் போன்று, பெரம்பலூரிலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சில சமூக வலைதள செய்திகளின் மூலம் தெரிய வருகிறது. இதில் பெரம்பலூர் ஆளுங்கட்சியை சேர்ந்த  ஒரு முக்கிய பிரமுகரும், உள்ளூர் தொலைக்காட்சியில் பணி புரிந்து கொண்டு தன்னை சீனியர் நிருபர் என கூறிக்கொள்ளும் போலி நிருபரும் இன்னும் சிலரும் குழுவாக ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதில் பல குடும்ப  பெண்கள், கல்லூரி மாணவிகளிடம் வேலை வாங்கித்தருவதாக கூறி அழைத்து சென்று தங்களின் காம இச்சைக்கு இணங்க வைத்து, அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டுள்ளனர்.

 இதைவைத்து, அவர்களின் தேவைக்கு மிரட்டி தன்னிடமோ அல்லது பிறரிடமோ பாலியல் இச்சைக்கு இணங்க சொல்லி தொல்லை கொடுத்து வருவது, அதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கும் பெண்களிடம்  வீடியோவை  வெளியிடுவோம் என்றும் அதனால் உன் குடும்பமே அதைப்பார்த்து தற்கொலை செய்து கொள்ளும் என்று மிரட்டியும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், பல பெண்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். உரிய விசாரணை மேற்கொண்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகார், பொள்ளாச்சி மாணவிகள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைப்போல பெரம்பலூரில் நடந்திருப்பது தமிழகத்தில் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாவட்ட எஸ்.பி.யிடம் கேட்டபோது, ``இந்த  சம்பவம் குறித்து ஏடிஎஸ்பி ரங்கராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உரிய விசாரணை நடத்தப்படும்’’ என்று பதில் அளித்தார்.இதுதொடர்பான விசாரணையில், தங்கள் ஆசைக்கு இணங்கியதுபோல், தங்களுக்கு நெருக்கமான முக்கிய பிரமுகர்களிடமும் இணக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்று பெண்களை போலி நிருபரும், அதிமுக பிரமுகரும்  மிரட்டியது தெரியவந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த பெண்களிடம் `நாம் ஒன்றாக இருக்கும்போது எடுத்த வீடியோவை வெளியிடுவேன் எனக்கூறி மிரட்டி இருக்கின்றனர். இதன்பின், பாதிக்கப்பட்ட பெண், காவல்துறையிடம்  தகவல் தெரிவித்தபோது இந்த விஷயங்கள், வெளிஉலகுக்கு அம்பலமானது.

இந்தநிைலயில், பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. திஷாமித்தல் உத்தரவின்பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) சுப்புலட்சுமி 3 பிரிவுகளின்கீழ் அதிமுக முக்கியப் பிரமுகர், போலிநிருபர், இன்னும்  சிலர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். அதன்படி 354ன் பிரிவின்படி ஒருபெண்ணின் மானத்துக்கு பங்கம் ஏற்படுத்துகின்ற கெட்ட நோக்கத்தோடு தாக்குதல் நடத்துவது,  504 பிரிவின்படி கொடுங்காயம் ஏற்படுத்துவதாகக்கூறி  மிரட்டுதல் உள்ளிட்ட  வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அதிமுக முக்கிய பிரமுகர், போலி நிருபரால் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது விசாரணையில் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: