6 மாதங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் கிடுகிடு: பங்குச்சந்தை கடும் சரிவு...அமெரிக்காவின் சலுகையும் முடிவுக்கு வருவதால் சிக்கல்

மும்பை: கச்சா எண்ணெய் விலை கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் உயர்வை சந்தித்துள்ளது. இதனால் பங்குச்சந்தைகள் நேற்று திடீரென வீழ்ச்சி அடைந்தன. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பே இதற்கு முக்கிய  காரணம் என கூறப்படுகிறது.

வாரத்தின் துவக்க நாளான நேற்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடனே துவங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் நேற்று 39,158.22 புள்ளிகளில் துவங்கியது. தொடர்ந்து சரிவை சந்தித்து, வர்த்தக முடிவில், 38,645.18  ஆக இருந்தது. முந்தைய வர்த்தகத்தை விட 495.10 புள்ளிகள் சரிந்தன. இதுபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டியும், துவக்கத்திலேயே கடும் சரிவுடன் தொடங்கியது. மதியம் சிறிது ஏற்றம் அடைந்தாலும், வர்த்தக முடிவில் 158.35 புள்ளிகள் சரிந்து  11,594.45 ஆக சரிந்தது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கி இழப்பை சந்தித்தன. அதேநேரத்தில், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் பங்குகள் ஏற்றம் அடைந்தன.இதற்கு காரணம் கச்சா எண்ணெய் விலை ஏற்றம்தான். ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதித்துள்ள அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டும் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது.

 இதனால், ஈரானில் இருந்து ரூபாயாகவே செலுத்தி கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது. ஆனால் இந்த சலுகை மே மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இதன்பிறகு ஈரானில் இருந்து இறக்குமதி செய்ய எந்த  நாட்டுக்கும் சலுகை வழங்கப்பட மாட்டாது என டிரம்ப் அறிவித்துள்ளார்.இருப்பினும், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. தற்போது தேர்தல் நடந்து வருவதால், பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றம்  செய்வதில்லை. ஆனால், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5 மாதங்களில் இல்லாத உச்சமாக பேரல் 71.97 டாலராக இருந்தது. நேற்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 3 சதவீதம் அதிகரித்து 74  டாலராக ஆகியுள்ளது. ஈரானில் இருந்து இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட சலுகை இனியும் தொடராது என்று அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்ததன் விளைவுதான் இது என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.

ஈரான் இறக்குமதிக்கு வேட்டு பெட்ரோலுக்கு வருது ஆபத்து

கச்சா எண்ணெய் விலை 70 டாலரை தாண்டியபோது பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வை சந்தித்தது. தற்காலிகமாக விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்திருந்தாலும், தேர்தல் நேரத்தில் மத்திய அரசுக்கு  பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தேர்தல் முடியும் வரை எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை தாக்குப்பிடிக்குமா என்று தெரியவில்லை. எனவே மீண்டும் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது  என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மே மாதத்தில் இருந்து ஈரான் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்ய முடியாது. இது விளைவுகளை மேலும் மோசமாக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: