பாடாய் படுத்திய பணமதிப்பு நீக்கம் 2 ஆண்டில் 50 லட்சம் பேருக்கு வேலை போச்சு...ஆய்வில் திடுக் தகவல்

புதுடெல்லி: பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு 2 ஆண்டுகளில் 50 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர் என ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இதில் மோசமாக பாதிக்கப்பட்டது பெண்கள்தான் எனவும் அந்த ஆய்வு  சுட்டிக்காட்டியுள்ளது. நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் மிக முக்கியமாக பேசப்படுவது வேலைவாய்ப்புதான். வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது என மத்திய அரசு கூறி வருகிறது. பிஎப் நிறுவன புள்ளி விவரங்களும் இதற்கு சாதகமாகவே  வெளிவந்துள்ளன.ஆனால், வேலை வாய்ப்பு எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன. பிஎப் நிறுவனம், பிஎப் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு தெரிவிக்கிறது. ஆனால், பிஎப்  திட்டத்தில் இணையாத முறைசாரா தொழில்களில் ஈடுபடும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை வாய்ப்பு சரிந்ததற்கு மிக முக்கிய காரணம் பணப்புழக்கம் குறைந்ததுதான். 2016ம் ஆண்டு நவம்பரில் பணமதிப்பு  நீக்கத்துக்கு பிறகு, பணப்புழக்கம் அடியோடு சரிந்து விட்டது. தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் நடத்திய ஆய்வில், 2017-18 நிதியாண்டில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 6.1 சதவீதம் எனவும், இது 45  ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பாதிப்பு எனவும் குறிப்பிட்டிருந்தது.

 ஆனால், பாதிப்புகள் இதை விட அதிகம் என்பதை மற்றொரு ஆய்வு நிரூபித்துள்ளது. பெங்களூரு அசிம் பிரேம்ஜி பல்கலை நடத்திய ஆய்வில், 2016 மற்றும் 2018 ஆண்டுகளுக்கு இடையே சுமார் 50 லட்சம் பேர் வேலை  வாய்ப்பை இழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளது. கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்கும் நோக்கில், பழைய ₹500, ₹1,000 நோட்டு செல்லாது என 2016 நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதன் பிறகு  பணப்புழக்கம் அடியோடு முடங்கியது. இயல்பு நிலைக்கு திரும்பவே மாதக்கணக்கில் ஆகிவிட்டது. கிராமப்புற பொருளாதாரம் முழுக்க முழுக்க பணப்புழக்கத்தை சார்ந்தே இருக்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனை பற்றி கிராமங்கள் அறிந்திருக்கவே இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், திடீரென பணமதிப்பு நீக்கம் செய்வதால்  கிராமப்புறங்களில் மட்டுமின்றி, நகரங்களில் கூட சிறு தொழில் செய்பவர்கள் அல்லல்பட்டனர். புதிதாக முதலீடுகள் மேற்கொள்ள முடியவில்லை. வங்கிகளில் டெபாசிட் செய்த பணத்தையும் எடுக்க இயலவில்லை. இதன் காரணமாக, தொழில் விரிவாக்கம் செய்ய முடியாமலும், இருக்கும் தொழிலை நடத்த முடியாமலும்  மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுவே வேலை வாய்ப்பின்மை ஏற்பட மிக முக்கிய காரணமாக அமைந்து விட்டது. வேலைவாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டவர்களில் பெண்கள்தான் அதிகம் என ஆய்வில் சுட்டிக்  காட்டப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: