குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 3 பேர் ஜாமீனில் விடுதலை

சென்னை: போதைப் பொருட்களான குட்கா, பான்மசாலா போன்ற பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு கடந்த 2013ம் ஆண்டு தடைவிதித்தது. அதைமீறி தமிழகத்தில் அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் என பலருக்கு பல கோடி லஞ்சம் கொடுத்துவிட்டு, குட்கா தடையின்றி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதன்படி, செங்குன்றம் அருகே உள்ள குட்கா குடோனில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு டைரி ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், போலீஸ் அதிகாரிகள், அமைச்சரின் பெயர்கள் லஞ்சம் வாங்கிய பட்டியலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கை விசாரித்தனர். ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், திமுக தொடர்ந்த வழக்கின்படி, சென்னை உயர் நீதிமன்றம் குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.

அதன்படி டெல்லியில் இருந்து தமிழகம் விரைந்த சிபிஐ அதிகாரிகள், டிஜிபி ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் என பல முக்கிய புள்ளிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். கடைசியில், குட்கா உற்பத்தியாளர் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா மற்றும் அரசு அதிகாரிகள் செந்தில் முருகன், பாண்டியன், சிவகுமார் ஆகிய 6 பேரை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்து குற்றப்பத்திரிகை தக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில், முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இல்லை என்றே கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில், வேறு யாரையும் சிபிஐ கைது செய்யவில்லை. இதை தொடர்ந்து கைதான 6 பேரும் பலமுறை ஜாமீன் கோரி சிபிஐ நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில், கடந்த வாரம் முதல் 3 குற்றவாளிகளான மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோர் ஜாமீன் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் மனு செய்தனர். அப்போது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. மேலும் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்போம் என்றெல்லாம் கூறப்பட்டிருந்தது.  இந்த நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத் 3 பேரும் சென்னை கேன்சர் இன்ஸ்டிடியூட்டுக்கு தலா ரூ.2 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறி நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மற்ற 3 பேருக்கும் ஏற்கனவே, உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. எனவே கைது செய்யப்பட்ட 6 பேரும் தற்போது வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: