ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் வெற்றி

ஜெய்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் வெற்றி பெற்றது. சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசியது. ராஜஸ்தான் தொடக்க வீரர்களாக அஜிங்க்யா ரகானே, சஞ்சு சாம்சன் களமிறங்கினர். சாம்சன் ஒரு பந்தை கூட சந்திக்காமல் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். அடுத்து ரகானேவுடன் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இணைந்தார். பொறுப்புடன் விளையாடிய இருவரும் 2வது விக்கெட்டுக்கு 130 ரன் சேர்த்து அசத்தினர். ரகானே 32 பந்தில் அரை சதம் அடிக்க, ஸ்மித் 31 பந்தில் 50 ரன் (8 பவுண்டரி) எடுத்து அக்சர் பட்டேல் சுழலில் மோரிஸ் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் 8 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆஷ்டன் டர்னர் சந்தித்த முதல் பந்திலேயே முட்டை போட்டு பெவிலியன் நோக்கி வாத்து நடை போட்டார். டர்னர் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக 5 முறை டக் அவுட்டாகி (0, 0, 0, 0, 0) மோசமான சாதனை படைத்தார்.

ஸ்டூவர்ட் பின்னி 19 ரன் (13 பந்து, 2 பவுண்டரி), பராக் 4 ரன்னில் வெளியெற, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன் குவித்தது. ரகானே 105 ரன்னுடன் (63 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சில் காகிசோ ரபாடா 2, இஷாந்த் ஷர்மா, அக்சர் பட்டேல், கிறிஸ் மோரிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: