அடிப்படை வசதியில்லாத திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷன்: பயணிகள் சிரமம்

திருமங்கலம்: திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் போதிய அடிப்படை வசதி இல்லாததால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் மதுரை-கன்னியாகுமரி ரயில்வே வழித்தடத்தில் உள்ள முக்கிய ஸ்டேஷன்களில் ஒன்று. மதுரை-செங்கோட்டை, மதுரை-புனலூர், பாலக்காடு- திருச்செந்தூர், நாகர்கோயில்-மங்களூர்,  தூத்துக்குடி-மங்களூர் உள்ளிட்ட பயணிகள் ரயில்களும், சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இங்கு நின்று செல்கின்றன. தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆனால் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதி இல்லை. மேற்கூரை போதுமான அளவு இல்லை. இதனால்  ஸ்டேஷனில் பல்வேறு பகுதிகளில் பயணிகள் வெட்டவெளியில் நின்று ரயில் ஏறும் நிலை உள்ளது. தவிர பிளாஸ்ட்பாரங்களில் இருக்கையில் அமர்ந்துள்ள பயணிகளுக்கு காற்றோட்ட வசதிக்காக மின்விசிறி இல்லை.

ஸ்டேஷனில் உள்ள அனைத்து கழிவறைகளும் பல ஆண்டுகளாக பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கின்றன. ஒரேயொரு மினரல் வாட்டர் தொட்டி மட்டுமே அமைந்துள்ளது. பிளாட்பாரங்களில் எலி தொல்லை அதிகளவில்  இருப்பதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். பிளாட்பாரத்தின் உயரம் மிகவும் குறைவாக இருப்பதால் ரயிலிலிருந்து பயணிகள் இறங்கி, ஏறுவதில் சிரமம் உள்ளது. இதுகுறித்து பலமுறை பயணிகள் புகார் தெரிவித்தும் ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இரவில் சமூகவிரோதிகளின் நடமாட்டம் அதிகமுள்ளது. சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் புனலூர் செல்லும்  பயணிகள் ரயில் இரவு நேரத்தில் திருமங்கலத்திற்கு வருகின்றன. இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குறிப்பாக பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே ஸ்டேஷனில் போலீசார் இரவு  கண்காணிப்பில் ஈடுபடவேண்டும்.  குடிநீர், கழிவறை, மின்விசிறி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: