கோடை விடுமுறையால் களைகட்டும் கன்னியாகுமரி அடிப்படை வசதிகளின்றி சுற்றுலா பயணிகள் அவதி

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர். ஐயப்ப பக்தர்கள் சீசன் மற்றும் கோடை கால சீசன் காலங்களில் இங்கு எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காட்சியளிக்கும். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை மற்றும் சூரியன் உதயம், மறைவு போன்றவை சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. கடலில் படகு மூலம் பயணம் செய்து விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை அடைவது என்பது சுற்றுலா பயணிகளுக்கு புதுவித, மறக்க முடியாத அனுபவத்தை அளித்து வருகிறது.  தற்போது கோடை கால சீசன் தொடங்கியுள்ளதால் கன்னியாகுமரிக்கதமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். திருவேணி சங்கமத்தில் இன்று காலை சூரிய உதயம் தெளிவாக தெரிந்தது. இதை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் பகவதி அம்மன் கோயிலுக்கும் ெசன்று அம்மனை தரிசித்து செல்கின்றனர். தற்போது இங்கு அதிக பக்தர்கள் வருகை தருகின்றனர். பகவதி அம்மன் கோயிலில் தர்ம தரிசனம் மட்டுமே உள்ளது. சிறப்பு தரிசனம் கிடையாது. ஆனால் இங்கு வரும் பக்தர்களிடம் கோடி அர்ச்சனை என்ற பெயரில் ரூ.20 கட்டாய வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கான முறையான பூஜைகள் நடத்தப்படுவது இல்லை. பக்தர்களிடம் கட்டாய வசூல் நடத்திவிட்டு குடிநீர் உட்பட எந்த அடிப்படை வசதிகளும் முறையாக செய்யப்படவில்லை. பூஜை நேரங்களில் மேளம், நாதஸ்வரம் போன்றவை இருந்தும் இசைக்கப்படுவதில்லை. இதற்கு பக்தர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதுபோல மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் கீழ் முக்கோண பூங்கா அருகே ரூ.9 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம் 3 மாதங்கள் ஆகியும் திறந்து செயல்படுத்தப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது.

அதுபோல இங்குவரும் சுற்றுலா பயணிகளுக்கு பேரூராட்சி சார்பில் குடிநீர் வசதி, போதுமான கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. வறுத்தெடுக்கும் வெயிலில் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்க எந்த வசதியும் இல்லை. மேலும் அதிகாலை இங்குவரும் சுற்றுலா பயணிகளுக்கு மின்விளக்கு வசதிகள் இல்லை.  கன்னியாகுமரியில் செயல்படும் பல ஓட்டல்களில் முறையான விலைப்பட்டியல் இல்லை. சுற்றுலா பயணிகளை பொறுத்து உணவின் விலை வசூலிக்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் சோதனை நடத்துவதில்லை. இதனால் கடைக்காரர்கள் வைத்ததுதான் சட்டம், விலை என சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: