பழையாற்றில் கழிவுநீர் கலப்பால் துர்நாற்றம் வீச்சு: பொதுமக்கள் குளிக்க சிரமப்பட்டு வருகின்றனர்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் ஓடும் பெரிய ஆறுகளில் பழையாறும் ஒன்று. இந்த ஆற்றில் பல இடங்களில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு, குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பழையாறு போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால், ஆக்கிரமிப்பு பிடியில் இந்த ஆறு சிக்கியுள்ளது. மேலும் ஆகாயதாமரையும் படந்துள்ளதால், தண்ணீர் மாசு அடைந்து வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால், மாநகராட்சி குறைந்த அளவே தண்ணீரை விநியோகம் செய்து வருகின்றனர்.இதனால் வடசேரி சுற்றுவட்டார பகுதி மக்கள் பழையாற்றில் குளித்து வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு நாகர்கோவில் நகர பகுதியில் மழை பெய்தது. இந்த மழையின்காரணமாக சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கழிவு நீர் நேராக பழையாற்றில் கலக்கிறது. இதன் காரணமாக பழையாற்று தண்ணீர் துர்நாற்றம் வீசி வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் பழையாற்றில் குளித்து வருகின்றனர். பழையாற்றில் சபரி அணை, குமரி அணை என இரு அணைகள் உள்ளன.

 இந்த அணைகள் திறக்கப்படாததால், ஆற்றில் கலக்கும் கழிவுநீர் தண்ணீரை எதிர்த்து வருகிறது. இதனால் ஒழுகினசேரியில் உள்ள படித்துறைகளில் பொதுமக்கள் குளிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இது குறித்து ஒழுகினசேரி பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது: மாநகராட்சி பகுதிக்கு முக்கடல் அணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறார்கள். மேலும் ஆழ்துளை கிணறு தண்ணீரும் குறைந்த அளவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பழையாற்றில் குளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெய்த மழையின்காரணமாக நாகர்கோவில் நகர பகுதியில் உள்ள அனைத்து கழிவு நீரும் பழையாற்றில் கலந்துள்ளது.

அப்போது சபரி அணையை திறந்து இருந்தால், கழிவுநீர் ஆற்றில் சென்று இருக்கும். ஆனால் அணை திறக்கப்படாததால், பழையாற்றில் கழிவுநீர் அப்படியே தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு குளிக்க வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்ட சபரி, குமரி அணைகளை திறந்து, கழிவுநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: