மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து வழக்கு : நிர்மலா தேவி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!

மதுரை : மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் ஆஜராகி நிர்மலா தேவி விளக்கம் அளித்துள்ளார். கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயன்றதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கடந்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். சிபிசிஐடி காவல் நிறைவடைந்து, மதுரை சிறையில் நிர்மலா தேவி அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் நிர்மலா தேவி அடுத்தடுத்து தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் அனைத்தும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

இதனிடையே நிர்மலா தேவி வழக்கில் உயரதிகாரிகள் என கூறப்படுவோரிடம் உரிய விசாரணை நடத்தப்படவில்லை, சிபிசிஐடி விசாரணையில் திருப்தி இல்லை என கோரி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது நிர்மலா தேவியின் ஜாமின் மனுவையும் இந்த நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு தொடர்பாக செய்தியாளர்களை சந்திக்க கூடாது. நீதிமன்ற விசாரணையின் போது ஆஜராக வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து அவருக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்நிலையில் சுமார் 11 மாதங்கள் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த நிர்மலா தேவி, ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் மார்ச் 27ம் தேதி முதன் முறையாக ஆஜரானார். இந்த வழக்கில் கைதாகியிருந்த உதவி பேரசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் ஆஜராகினர். இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் நிர்மலா தேவி ஆஜராகியுள்ளார். நீதிபதியின் தனி அறையில் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: