பொன்னமராவதி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்த இலுப்பூர் கோட்டாட்சியர் பணியிடமாற்றம்

புதுக்கோட்டை : இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொன்னமராவதி பகுதியில் போராட்டத்தை கட்டுப்படுத்த 144 உத்தரவு பிறப்பித்த சிவதாஸ் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒரு சமூகத்தை பற்றி அவதூறான ஆடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகார் மீது காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், பொன்னமராவதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுமார் 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல் நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன் காவல்துறைக்கு சொந்தமான 4 கார்கள், 2 வேன்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இச்சம்பவத்தில் 3 காவல்துறையினர் மற்றும் 10க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் அதே கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பொன்னமராவதி காவல் நிலையத்தில் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்தினர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதால், இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். அதில் ஏப்., 19ம் தேதி முதல் 21ம் தேதி இரவு 12 மணி வரை பொன்னமராவதி தாலுகாவுக்கு உட்பட்ட 49 கிராமங்களில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். அதன்படி ஒரே இடத்தில் 4 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்றும், திருமணம் மற்றும் இறுதி ஊர்வலத்துக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் 144 உத்தரவு பிறப்பித்த சிவதாஸ் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: