இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு : தேவாலயம் அருகே கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்த போது விபரீதம்

கொழும்பு: கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க முயன்றபோது குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. கொச்சிக்கடை தேவாலயத்தில் தீவிரவாதிகள் பயன்படுத்திய காரில் எஞ்சியிருந்த குண்டுகள் வெடித்தன.

உலகை உலுக்கிய இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல்களின் முழு விவரம்

*உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இலங்கையில் கிறிஸ்தவர்கள் நேற்று பல்வேறு தேவாலயங்களில் திரண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.

*நேற்று காலை 8.45 மணியளவில் கொழும்புவின் கோச்சிகடே பகுதியில் உள்ள செயின்ட் அந்தோணி புனித தேவாலயத்தில் முதல் குண்டு வெடித்துச் சிதறியது.

*அதே நேரம், புறநகரான நெகோம்போ பகுதியில் உள்ள செயின்ட் செபாஸ்டியன் தேவாலயம், தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பில் உள்ள ஜியான் தேவாலயங்களிலும் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துச் சிதறின.

*இதுதவிர கொழும்பில் உள்ள பிரபலமான மூன்று 5 நட்சத்திர ஓட்டல்களிலும் வெடிகுண்டுகள் வெடித்து சிதறின.

*இதில், தேவாலயங்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த மக்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர். உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 290 பேர் பலியாகி உள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

*இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.   இதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

*மேலும் குண்டுவெடிப்பு சம்பவம் காரணமாக நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

*இதனை தொடர்ந்து, இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்படுவதாக இருந்த நிலையில், இன்று நள்ளிரவு முதல் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்படும் என்றும் முப்படைகளுக்கும் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.

*இந்த அவசர நிலை பிரகடனத்தை அடுத்து ஊடகங்கள், அரசியல் கட்சிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அசாதாரண சூழலை கட்டுக்குள் கொண்டுவர அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அதிபர் விளக்கமளித்துள்ளார்.

*மேலும் இலங்கையில் நாளை தேசிய அளவில் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

*இதற்கிடையில் இலங்கையில் 290 உயிர்களை பறித்த 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையிலான விசாரணை குழுவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அமைத்துள்ளார்.

*இதனிடையே இலங்கையில் 8 இடங்களில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளை தொடர்ந்து, இன்று காலை கொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த 6 அடி நீள் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இதனை வெடிகுண்டு நிபுணர்கள் வெற்றிகரமாக செயலிழக்க செய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

*கொழும்பில் குண்டுவெடிப்பு நடந்த 7 இடங்களில் சேகரித்த தடயங்களை ஆய்வு செய்ததில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் தற்கொலைப் படையினர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டவரை குறிவைத்து கொழும்பில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு உள்ளதாகவும் உறுதி ஆகியுள்ளது.

*இலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு

இந்நிலையில் இலங்கையில் நிபுணர்கள் வெடிகுண்டுகளை செயலிழக்க செய்த போது, மீண்டும் ஒரு வெடிகுண்டு வெடித்தது. கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே நின்று கொண்டிருந்த வேனில் இருந்த வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழக்க முயன்றனர். நிபுணர்கள்

வெடிகுண்டை செயலிழக்க முயன்று கொண்டு இருந்த போது அது காருடன் வெடித்து சிதறியது.

கொச்சிக்கடை தேவாலயத்தில் தீவிரவாதிகள் பயன்படுத்திய காரில் எஞ்சியிருந்த குண்டுகளும் சேர்ந்து வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. 9வது வெடிகுண்டு வெடித்தத்தை அடுத்து கொழும்பு நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: