ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை தொடரும் நாடுகளுக்கு பொருளாதார தடை: அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன் : ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 2ம் தேதிக்கு பிறகும் கச்சா எண்ணெய் இறக்குமதியை தொடரும் நாடுகளுக்கு அமெரிக்கா பொருளாதார தடையை விதிக்கவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இது குறித்த விரிவான அறிவிப்பை அமெரிக்கா அமைச்சர் மைக் பாம்பியோ வெளியிடுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதமே அமெரிக்கா தடை விதித்தது. ஆனால் இறக்குமதியை நிறுத்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் அவகாசம் கேட்டதால் தடைக்கான கெடுவை மே 2ம் தேதி வரை அமெரிக்கா நீடித்துள்ளது.

தற்போது கெடு தேதி நெருங்கும் நிலையில், அதனை நினைவூட்டும் வகையில் அமெரிக்கா மீண்டும் ஒரு எச்சரிக்கை விடுக்கும் எனத் தெரிகிறது. ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களை நிறுத்துவதற்காக அந்நாட்டுக்கு அமெரிக்கா பொருளாதார ரீதியில் நெருக்கடி தந்து வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக  அந்நாட்டிடம் இருந்து பிற நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த அமெரிக்கா நிர்பந்தித்து வருகிறது. அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு இந்தியா கட்டுப்படும் பட்சத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்து பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: