பி.எம்.நரேந்திர மோடி திரைப்படம் தொடர்பான அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது தேர்தல் ஆணையம்

டெல்லி: பி.எம்.நரேந்திர மோடி திரைப்படம் தொடர்பான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் உச்சநீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்தது.  பி.எம்.நரேந்திர மோடி படத்தை பார்த்துவிட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று பி.எம்.நரேந்திர மோடி படம் தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து பி.எம்.நரேந்திரமோடி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசியல் நோக்கத்தோடு படம் வெளியிடப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர்.

மறுபுறம், படத்திற்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டதன் காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, மோடி படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தது. ஆனால் படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் இன்னும் சான்றிதழ் வழங்காததால், படத்தை வெளியிடுவது குறித்து நீதிபதிகள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. மேலும் படம் வெளியாவது விதிமீறலா என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து, தேர்தல் ஆணையம் உடனடியாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு ஒரு கடிதம் எழுதியது. அதில், பிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை தெரிவிக்கும்படி கூறியுள்ளது.

தணிக்கை வாரியம் அளிக்கும் தகவலின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் என கூறப்பட்டிருந்தது. இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 11ம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. இந்த முடிவுக்கு தடை விதித்து கடந்த 10ம் தேதி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, படத்தின் தயாரிப்பு நிறுவனம் கடந்த 12ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த படத்தை முழுமையாக பார்க்காமலே படத்தின் மீது குற்றம் சுமத்துகிறார்கள் என குற்றம் சாட்டப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் கடந்த 15ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த படத்தினை முழுமையாக பார்த்துவிட்டு தேர்தல் நேரத்தில் வெளியிடலாமா, வேண்டாமா என்பது குறித்து அறிக்கை தர தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் 22ம் தேதிக்குள் இதுகுறித்த அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யா உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மோடி திரைப்படம் குறித்த அறிக்கையை சீலிட்ட கவரில் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 26-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: