வாக்கு இயந்திரம் உள்ள அறைகளில் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் முகவர்கள் இருக்கலாம் : சத்யபிரதா சாஹூ

சென்னை : வாக்கு இயந்திரம் உள்ள அறைகளில் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் முகவர்கள் இருக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். மதுரையில் வாக்குப்பதிவு மையத்தில் பெண் வட்டாட்சியர் ஒருவர் நுழைந்து ஆவணங்களை நகல் எடுத்ததை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் புகார் அளித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் கலால் வட்டாட்சியர் சம்பூர்ணம் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே சம்பூர்ணத்திற்கு உதவியதாக இன்று காலை மேலும் 3 பேர் சஸ்பெண்ட் செய்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான நடராஜன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், வாக்கு இயந்திரம் வைத்துள்ள அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களின் முகவர்கள் இருக்கலாம் என சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி முகவர்களும், சுயேட்சை கட்சி முகவர்களும் 24 மணி நேரமும் வாக்கு இயந்திரம் உள்ள அறைகளில் இருக்கலாம் என்றும், இது தேர்தல் விதிகளில் இருக்கும் நடைமுறை தான் என்றும் கூறப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் தேர்தல் விதிகளை பின்பற்ற வேண்டும், தமிழக அரசு முக்கிய அறிவிப்புகளை தேர்தல் ஆணைய அனுமதிக்கு பின்னரே வெளியிட வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 8 வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூர் மற்றும் கடலூரில் தலா 1 என 10 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூடுதல் தலைமை அதிகாரி பாலாஜி தன் அறிக்கையை நாளை சமர்பிப்பார் என்றும், மே 23ம் தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த 18ம் தேதி 38 மக்களவை தொகுதிக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிவடைந்துள்ள நிலையில் தேர்தல் நடந்து முடிந்த 28 மாவட்டங்களில் பறக்கும் படை விலக்கி கொள்ளப்பட்டது. இருப்பினும் இடைத்தேர்தல் நடக்கும் 4 தொகுதிகளிலான தூத்துக்குடி, மதுரை, கரூர், மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படை ஆய்வு தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மாவட்டங்களில் உள்ள ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் சூலூர் ஆகிய தொகுதிகளில் வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: