தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை : உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை

புதுடெல்லி : உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சிப் பொறுப்புகள் கடந்த 2016 அக்டோபர் 24ம் தேதி முதல் காலியாக உள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரி கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 26ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் இருப்பது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்க மாநில தேர்தல் ஆணையம், தலைமை செயலருக்கு நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கு கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி விசாரணைக்கு வந்த போது 4 வாரம் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்ற பதிவாளர் முன் கடந்த ஜனவரி 21ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் பி. வினோத் கண்ணா கூடுதல் அவகாசம் கோரினார். இதை தொடர்ந்து 4 வாரம் கூடுதல் அவகாசம் வழங்கிய பதிவாளர், இனி அவகாசம் வழங்கப்படமாட்டாது என உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணையின் போது உள்ளாட்சி தேர்தல் எப்போது என திட்டவட்டமாக தேதி வாரியாக அறிக்கை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: