டெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு: வடகிழக்கு தொகுதியில் ஷீலா தீக்சித் போட்டி

புதுடெல்லி: டெல்லி மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், டெல்லி வடகிழக்கு மக்களவை தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீக்சித் போட்டியிடுகிறார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தற்போது வரை இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் 6 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இங்கு அடுத்தமாதம் 12ம் தேதி ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்ய இம்மாதம் 23ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல, டெல்லியில் 6வது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

முன்னதாக, காங்கிரஸ் கட்சி பாஜகவை வீழ்த்த ஆளும் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் ஹரியானா, பஞ்சாபில் தங்களுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே டெல்லியில் கூட்டணி என ஆம் ஆத்மி தலைவர்கள் தெரிவித்தால் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில்,7 மக்களவை தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாக, இன்றைக்குள் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என்று டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் ‌ஷீலா தீக்சித் தெரிவித்திருந்தார். 7 தொகுதிகளுக்கான கட்டுப்பாட்டு அறையைத் திறந்து வைத்துப் பேசிய அவர், ‘‘அனைத்துத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயரை கட்சி தலைமை அறிவிக்கும் என்றும், தான் சாந்தினி சௌக் தொகுதியில் போட்டியிடத் தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும், இதுகுறித்துக் கட்சிதான் இறுதி முடிவு எடுக்கும்’’ எனவும் கூறியிருந்தார். அதன்படி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. அதில் டெல்லி வடகிழக்கு மக்களவை தொகுதியில் ஷீலா தீக்சித் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: