×

கண்ணமங்கலம் அருகே பரபரப்பு 16 வயது சிறுவன் யோக நிலையில் ஜல சமாதி?

கண்ணமங்கலம்:  திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த படவேடு அருகே ராமநாதபுரத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி சுமதி. விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து  வருகிறார்கள். இவர்களது மகன் தனநாராயணன்(16), 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கோயில், கோயில்களாக சென்று வழிபாடு  செய்தும், தியானத்தில் இருந்தும் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், அரிகிருஷ்ணன் மகனுக்கு மனநலன் பாதித்திருக்கலாம் என்று கருதி வேலூர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தாராம். டாக்டர்கள், சிறுவனுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று அனுப்பியுள்ளனர். தனநாராயணன்  தன்னை யாராவது துறவியிடம் அழைத்து சென்றால் சரியாகிவிடும் என்று கூறினாராம்.

அதன்படி அவரை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள சாமியார் ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளார். அவரிடம் தனிமையில் பேசி விட்டு வந்தது முதல் தனநாராயணன் தனது வீடு, விவசாய நிலத்தின் அருகில் உள்ள கிணறு  பகுதியில் தியானம் செய்து வந்தாராம்.  
இந்நிலையில் கடந்த மார்ச் 24ம் தேதி தனநாராயணன் கிணற்றடியில் கிருஷ்ணரின் உருவப்படத்தையும், தனது உருவத்தையும் தத்ரூபமாக வரைந்து விட்டு கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. தகவல்  அறிந்த தீயணைப்பு  வீரர்கள் விரைந்து வந்து தனநாராயணனை சடலத்தை 3 மணி நேரத்துக்கு பின்னர்  மீட்டனர்.  அப்போது அந்த வழியாக வந்த சாமியார் ஒருவர் அங்கு விரைந்து வந்து சிறுவனின் நாடியை பிடித்து பார்த்து,  யோகநிலையில்  ஜலசமாதியாகிவிட்டார் என்று கூறியதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். இதையடுத்து பள்ளம் தோண்டி உறைகள் வைத்து குழியில் விபூதி நிரப்பப்பட்டு தனநாராயணன் சடலத்தை பத்மாசன நிலையில் அடக்கம் செய்தார்களாம்.  சுமார் ஒரு மாதம் ஆன நிலையில் இதுகுறித்து சந்தவாசல் போலீசார்  விசாரணை மேற்கொண்டு உள்ளனர். கலெக்டர் விசாரணை: இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியும் விசாரணை நடத்தினார். இதுகுறித்து கலெக்டர் கந்தசாமியிடம் கேட்டபோது, ‘சிறுவனின் பெற்றோரை நாளை (இன்று) விசாரணைக்கு  அழைத்துள்ளோம்’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jala Samadhi , Sightseeing ,Kannamangalam, boy , yoga
× RELATED உடல்நலக்குறைவால் உயிரிழந்த மகனை...