×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தங்கத்தேர் பீடம் உடைந்து விழுந்து பக்தர் படுகாயம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் வேண்டுதலுக்காக தங்கத்தேர் இழுத்து சென்றபோது, தேர் உச்சியிலிருந்து பீடத்துடன் கலசம் உடைந்து கீழே விழுந்ததில் ஒருவர் படுகாயம்  அடைந்தார்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தின் அனுமதி பெற்று, கட்டண தொகையை செலுத்தி பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். சுமார் 16 அடி உயர தங்கத்தேர் கடந்த 2006ல்  ₹87 லட்சம் மதிப்பில் புதிதாக வடிவமைக்கப்பட்டது. அண்ணாமலையார் கோயில் மகா கும்பாபிஷேக திருப்பணி காரணமாக கடந்த 2015 ஜனவரி முதல் தங்கத்தேர் பவனி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த 2017 பிப்ரவரி 6ம் தேதி கும்பாபிஷேகம் நிறைவடைந்ததும், தங்கத்தேர் பவனி வராமல் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதால், தேரின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டது. மேலும்,  தங்கத்தேரை சீரமைக்கும் பணியை அறநிலையத்துறை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டது.  

இதற்கிடையே, உபயதாரரின் உதவியுடன் ₹3.50 லட்சம் மதிப்பில் தேர் சீரமைக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 22ம் தேதி தங்கத்தேர் வெள்ளோட்டம் நடந்தது.  இந்நிலையில், நேற்று பக்தர்கள் குழுவினர் தங்கத்தேர் இழுத்து நேர்த்திகடன் செலுத்த வந்தனர். அதன்படி காலை 9.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேருக்கு 3ம் பிரகாரத்தில் உள்ள கொடிமரம் அருகே பூஜை செய்து  வழிபட்டனர்.பின்னர், அங்கிருந்து தேரை இழுத்தனர். சுமார் 30 அடி தூரம் வந்தநிலையில், சம்மந்த விநாயகர் சன்னதி எதிரே, திடீரென தங்கத்தேரின் உச்சியில் இருந்த தங்க கலசம் பீடத்தோடு உடைந்து கீழே விழுந்தது. அப்போது, தேர்  அருகே நின்றிருந்த வேட்டவலம் சாலை பசுங்கரையை சேர்ந்த மணிவண்ணன் (26) என்பவர் மீது கலசம் விழுந்து அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவருக்கு கோயிலில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே, தொடர்ந்து தேரை இழுத்து சென்று பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். கீழே விழுந்த பீடத்துடன் கூடிய கலசத்தை கோயில் ஊழியர்கள் உடனடியாக  எடுத்து சென்று துணி சுற்றி அறையில்  வைத்து பூட்டினர்.

பின்னர் பவனி முடிந்ததும் அவசர, அவசரமாக தேர் நிறுத்தப்படும் அறைக்கு இழுத்து சென்று வைத்து அனைத்து கதவுகளையும் அடைத்து, பக்கவாட்டு ஜன்னல்களை துணிகளை கொண்டு மறைத்து வைத்தனர்.தங்கத்தேரின் உச்சியிலிருந்த கலசம் சரியாக பொருத்தப்படாமல் கழன்று கீழே விழுந்ததா? அல்லது கேபில் ஒயர் தடுத்ததால் உடைந்து விழுந்ததா? என்பது உடனடியாக தெரியவில்லை. தங்கத்தேரில் இருந்து திடீரென கலசம்  கீழே விழுந்தது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சீராக பராமரிக்கப்படுகிறதா?
கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்ட தங்கத்தேர் கடந்த பிப்ரவரி மாதம் வெள்ளோட்டம் நடந்தது. வெள்ளோட்டத்தின் போதே தங்கத்தேரில் பொருத்தப்பட்ட குதிரையின் கால் ஒன்று முறிந்து விழுந்தது. பல லட்சம்  மதிப்பில் தேர் சீரமைக்கப்பட்டு 2 மாதங்களே ஆன நிலையில் தொடர்ந்து தங்கத்தேர் சேதமடைந்து வருவதால் கோயில் நிர்வாகம் சார்பில் தேர் முறையாக பராமரிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் பக்தர்களிடையே எழுந்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : devotees ,Thiruvannamalai Annamalaiyar , In Thiruvannamalai, Annamalaiyar , devotees fell
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...