×

கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் கனமழை: குமரியிலும் கோடை மழை கொட்டியது

கோவை: கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் பரவலாக பெய்த மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.  கோவையில்  கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி மேட்டுப்பாளையத்தில் அதிகபட்சமாக 5 செ.மீ. மழை பதிவானது.  கோவையில் நேற்று முன்தினம் மாலை  பெய்ய தொடங்கி இரவு முழுவதும் சாரல் மழையாக பெய்தது. மேலும் சில  இடங்களில் மழையுடன் சூறைகாற்றும் வீசியது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக கோவை மக்களின் முக்கிய நீராதாரமான சிறுவாணி  அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. மழை காரணமாக சிறுவாணி அணை தொடர்ந்து நிரம்பி வருகிறது.பொள்ளாச்சி சுற்று  வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் பெய்த கன மழையால், ஆனைமலை  மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் அறுவடைக்கு 200 ஏக்கரில் தயார்  நிலையில் இருந்த நெற்கதிர்கள் சாய்ந்து சேதமானது.

 திருப்பூர்   மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை பல இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி உடுமலையில் 15.60 மி.மீ, மடத்துக்குளம் 16, திருப்பூர் தெற்கு 18 மி.மீ. மழை பதிவானது.  ஈரோடு  மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு  பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கி ஈரோடு  பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் ஆட்டு கொட்டகையில் 12  ஆடுகள், ஒரு எருமை கன்று பலியானது. ஈரோட்டில் 45 மில்லி மீட்டரும்,  அதிகபட்சமாக சத்தியமங்கலத்தில் 68 மில்லி மீட்டரும் மழை  பெய்துள்ளது. நீலகிரி: நீலகிரி மாவட்டம் முழுவதும் பல  இடங்ளில் மழை பெய்தது. ஊட்டியில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் பெரும்பாலான பகுதிகளில்  உள்ள நீரோடைகள் மற்றும் நீர் நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்தது.கன்னியாகுமரி:  குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் கன மழை கொட்டியது. இது நேற்று காலை வரை நீடித்தது.மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக திற்பரப்பில் 68 மி.மீ மழை பதிவாகி இருந்தது.குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த கடுக்கரை அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1963ல் கட்டப்பட்ட பழைய கட்டிடங்கள் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது. கடந்த 2015ல் பெய்த தொடர் மழையில் இப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதுவரை சுற்றுச்சுவர் கட்டப்படவில்ைல. தற்போது கோடைமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பெய்த கனமழையில் இரவு கடுக்கரை அரசு உயர்நிலைப்பள்ளி பழமையான கட்டிடத்தின் ஓட்டு மேல்கூரை திடீரென இடிந்து விழுந்தது.

காட்டுத்தீ அச்சம் நீங்கியது
கோவையில் மதுக்கரை, பூலுவாம்பட்டி, கோவை வனப்பகுதிகளில் தொடர்ச்சியாக  காட்டுத்தீ ஏற்பட்டது. தற்போது பெய்துள்ள கோடை மழை காட்டுத் தீ அச்சத்தை போக்கியுள்ளது.இது பற்றி வனத்துறையினர் கூறியதாவது: கடுமையான  கோடை வெயில் தாக்கம் காரணமாக வனப்பகுதியில் வளர்ந்திருந்த செடி, கொடிகள் திடீரென தீப்பிடித்து எரிந்து பரவி  சேதத்தையும், மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி வந்தது. சில இடங்களில  காட்டுத்தீயை உடனடியாக அணைக்க  முடியாத நிலை ஏற்பட்டு வந்தது.  கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காட்டுத்தீ பரவுமோ  என்ற அச்சத்தை போக்கியுள்ளது என்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coimbatore ,Erode ,Nilgiris ,Kumari , Coimbatore, Erode, Nilgiris, heavy rains
× RELATED வனத்தில் கற்றாழை, துளசி காய்ந்தது