×

மதுரையில் இருந்து மலைக்கு இன்று புறப்படுகிறார் அழகர்: விடிய விடிய பூப்பல்லக்கு

மதுரை: வைகையில் கால் பதிக்க, மலையில் இருந்து இறங்கி வந்த அழகர், இன்று மீண்டும் மலைக்குத் திரும்புகிறார். நேற்றிரவு முதல் இன்று காலை வரை மதுரை தல்லாகுளத்தில் அழகரின் பூப்பல்லக்கு விடிய விடிய நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 19ம் தேதி அழகர் வைகை ஆற்றில் இறங்கினார். மறுநாள் சேஷ வாகனத்தில் வண்டியூரில் இருந்து புறப்பட்டு வைகை ஆற்றிலுள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு கருட வாகனத்தில் தோன்றி மண்டூக (தவளை) உருவில் இருந்த சுதபஸ் முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். நேற்று முன்தினம் இரவு ராமராயர் மண்டபத்தில் அழகரின் தசாவதார நிகழ்ச்சி நடந்தது.இரவு 12 மணி அளவில் முதலில் முத்தங்கி சேவை அவதாரத்தில் தோன்றினார். தொடர்ந்து மச்சவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம் எடுத்தார். கிருஷ்ண அவதாரம் எடுக்கும் போது விடிந்தது. காலை 6 மணிக்கு மோகினி அவதாரத்தில் தோன்றி மண்டபத்தைச் சுற்றி வந்தார். பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து, அழகரின் அவதாரங்களை தரிசனம் செய்தனர்.

நேற்று பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் இருந்து அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்துடன் புறப்பட்ட அழகர், மூங்கில் கடைவீதி, கோரிப்பாளையம் வழியாக இரவு 11 மணிக்கு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு சென்றார். இதுவரை அழகராக காட்சி தந்தவர் அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் வேடத்திற்கு மாறி, விடிய, விடிய பக்தர்களுக்கு காட்சியளித்தார். விவசாயிகள், நெல் மற்றும் தானியங்களை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் காணிக்கையாகச் செலுத்தினர்.
இன்று காலை 9 மணிக்கு அம்பலகாரர் மண்டபத்தில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கள்ளழகர், 11 மணிக்கு புறப்பட்டு ஆயுதப்படை மாரியம்மன் கோயில், டிஆர்ஓ காலனி, புதூர், மூன்றுமாவடி வழியாக அப்பன்திருப்பதி செல்கிறார். அப்பன்திருப்பதியிலும், கள்ளந்திரி, பொய்கைக்கரைப்பட்டி உள்ளிட்ட ஊர்களிலும் இரவு முழுவதும் திருவிழா, கேளிக்கை விளையாட்டுகள் நடைபெற உள்ளன. ஏழு நாட்களுக்கு பிறகு நாளை காலை 10.30 மணிக்கு மலைக்கு போய் சேருகிறார். இத்துடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Azhar ,Madurai , mountain, journey , Alagar:
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...