×

செயல் அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் பொறுப்பில் இருந்து 30 நாட்களுக்குள் விடுவிக்க வேண்டும்: அறநிலையத்துறைக்கு தமிழ்நாடு திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

சென்னை: அறநிலையத்துறையில் செயல் அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் பொறுப்பில் இருந்து 30 நாட்களுக்குள் விடுவிக்க வேண்டும். இல்லையெனில் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துவோம் தமிழ்நாடு திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்க செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் அருட்செல்வன், தலைவர் சம்பத்குமார், பொருளாளர் ஞானசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

* செயல் அலுவலர்கள் சத்தியசீலன், தங்கபாண்டியன் மீதான விதிமுறைகளை மீறி சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழான விசாரணை நிலுவையில் வந்து உடன் பணியிடம் வழங்க ஆணையரை வலியுறுத்த அறிவுறுத்தப்படுகிறது.
* கூடுதல் பொறுப்புக்களால் செயல் அலுவலர்கள் கூடுதல் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கூடுதல் பொறுப்புகளில் இருந்து 30 நாட்களில் விடுவிக்க உத்தரவிட வேண்டும். தவறும் பட்சத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் அல்லது விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
* தற்காலிக பணிநீக்கம் செய்யப்படும் நிலையில், தற்காலிக உத்தரவு பிறப்பிக்கும் அலுவலரே மாற்று ஏற்பாடும் செய்து கவனிக்க வேண்டும். அருகில் உள்ள வேறு கோயில் செயல் அலுவலர் பலரையும் கட்டாயப்படுத்தி கூடுதல் பொறுப்பு ஏற்க கட்டாயப்படுத்தக்கூடாது.
* கோயில் பணியாளர் நியமன விதிகளை தற்போது துறை வகுத்து வரும் நிலையில், அது துறையின் அடித்தளமான நேரடியாக தொடர்பு உள்ள செயல்அலுவலர்கள் சங்க கருத்தை கேட்காமல் ஒரு தலைப்பட்சமாக முடிவு செய்து இருப்பது வருத்தமளிக்கிறது.
* திருக்கோயிலில் காலியாக உள்ள செயல் அலுவலர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழ்நாடு குடிமை விதியின் படி 17 ஏ, 17 பி நடவடிக்கை இணைஆணையர் மட்டும் மேற்கொள்ள வேண்டும். உதவி ஆணையர் தேவையெனில் பரிந்துரைக்கலாம். ஆனால், தற்காலிக பணி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆணையருக்கு மட்டுமே செயல்படுத்த வேண்டும். எந்த செயல் அலுவலர்கள் மீதாவது 17 இ சட்டத்தின் கீழ் தற்காலிக பணி நீக்கம் எடுக்கப்பட்டால் விடுமுறை எடுத்து செல்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின் நகலை அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டியிடம் நாளை சங்க நிர்வாகிகள் வழங்குகின்றனர். அப்போது, கூடுதல் பொறுப்புகளில் இருந்து விடுவிக்க வலியுறுத்தப்படும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu ,Staff Officers , released ,responsibility , Tamil Nadu ,Executive Officers, Association
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...