மக்கள்நலப் பணிகள் முடங்கியுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மக்கள்நலப் பணிகள் முடங்கியுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாட்டில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. ஆனாலும், வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 23ம் தேதி தான் நடைபெறவிருக்கிறது என்பதால் தேர்தல் நடைமுறைகள் முடிவடையும் நாளான மே மாதம் 27ம் தேதி வரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நிறைவடைந்து விட்ட நிலையில் இந்தக் கட்டுப்பாடுகள் அவசியமா என்பது தான் இப்போதைய வினாவாகும். மக்களவைத் தேர்தல் அட்டவணை மார்ச் 10ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்பின் கடந்த 43 நாட்களாக நடத்தை விதிகள் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி நிலவுகிறது. தலைநகர் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்காக பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்த வேண்டும். ஆனால், அதற்கு தேர்தல் நடத்தை விதிகள் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளன. குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது பெரும் சிக்கலாகக் கூடும். மத்திய, மாநில அரசுகளால் தொடங்கப்பட்டு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிதி உதவித் திட்டங்களை இன்னும் 37 நாட்கள் கழித்து வழங்குவது பயனளிக்காது. எனவே, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நடத்தை விதிகளை தளர்த்தி மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவித் திட்டங்களையும், மக்களுக்குத் தேவையான மற்ற நலத்திட்டப் பணிகளையும் செயல்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும். தமிழக அரசும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுத வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: