×

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

சென்னை: திருவள்ளூர், தர்மபுரி, கடலூரில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். தமிழக தலைமை ேதர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமை செயலகத்தில் நேற்று அளித்த பேட்டி: மதுரை மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள  சேமிப்பு அறைக்கு 20ம் தேதி(நேற்று முன்தினம்) மாலையில் அதிகாரி ஒருவர் போய் ஒரு சில பேப்பரை பார்த்ததாக எங்களுக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தோம். மாவட்ட ஆட்சி தலைவர் அறிக்கை கொடுத்தார். தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்ட அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த அதிகாரியுடன் யாராவது போனார்களா, அவரை உள்ளே போக சொன்னது யார் என்ற தகவலை கேட்டு இருக்கிறோம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வி.வி.பேட் வைத்துள்ள ஸ்ட்ராங் ரூமுக்கு யாரும் போகவில்லை. ஸ்ட்ராங்க் ரூம் பக்கத்தில் உள்ள சேமிப்பு அறைக்கு தான் அந்த அதிகாரி போய் உள்ளார். அந்த அதிகாரியை உள்ளே செல்ல அனுமதித்தவர்கள் யார், யார் என்பது கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக, சி.பி.எம்., விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து புகார் கொடுத்துள்ளனர். சில தகவல்களை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த தகவல்களை மாவட்ட ஆட்சி தலைவர், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம். கட்சியினர் கூறிய புகார்களுக்கு புள்ளி விவரங்களுடன் விளக்கம் கொடுக்க சொல்லியிருக்கிறோம். அந்த தகவல் வந்த பிறகு முழு விவரம் தெரிவிக்கப்படும்.

 சேமிப்பு அறையில் பேப்பர், சீல், தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மட்டும் தான் இருக்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியில் துணை ராணுவப்படையினர், அதற்கு அடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகள்,  ஏஜென்ட், தேர்தல் நடத்தும் அலுவலர்  மற்றும் அதிகாரிகள் பார்வையில் இருக்கும். சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் மாவட்ட ஆட்சி தலைவர்கள் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால், யாரும் ஸ்ட்ராங் ரூமில் நுழைவதற்கு வாய்ப்பே இல்லை. தபால் ஓட்டு சேமிப்பு அறையில் இருக்க வாய்ப்பே இல்லை. அதற்கு கலெக்டர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தனியாக ஸ்ட்ராங் ரூம் அமைத்திருப்பார்கள். அங்கு தான் தபால் ஓட்டுகள் இருக்கும்.

 தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 10 வாக்குசாவடிகளில் மறு தேர்தல் நடத்துவதற்கு  பரிந்துரை செய்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில்  தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். அதில் தர்மபுரி மக்களவை ெதாகுதி பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 8 வாக்குசாவடிகள்,  திருவள்ளூரில் பூந்தமல்லியில் ஒரு வாக்குச்வாவடி,  கடலூரில் ஒரு வாக்குசாவடி என மொத்தமாக 10 வாக்குசாவடிகளுக்கு மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைத்துள்ளோம். இது தவிர வேறு எங்கும் இருந்து மறு தேர்தல் நடத்த அறிக்கை வரவில்லை. மறு தேர்தல் குறித்து உடனடியாக தகவல் வரும். தேர்தல் ஆணையம் தேதியை சொன்னால் அதன்படி மறு தேர்தல் நடத்தப்படும்.  கன்னியாகுமரியில் நிறைய வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளோம். எவ்வளவு பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது, வாக்குச்சாவடிகளில் புகார் கொடுத்து இருந்தால் அந்த புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சி தலைவருக்கு உத்தரவு போட்டிருந்தோம். இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி தலைவர் ஒரு சப்-கலெக்டரை வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.  அந்த அறிக்கை வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

10 வாக்குசாவடிகள் எவை?
திருவள்ளூரில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் மேட்டுப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் ெதாடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 195வது வாக்குசாவடி. தர்மபுரி தொகுதியில் அய்யம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் 181வது வாக்குச்சாவடி, 182வது வாக்குச்சாவடி, நாதம்பேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 192, 193, 194, 195, ஜாலிபுதூர் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 196, 197வது வாக்குச்சாவடி, கடலூர் திருவதிகை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 210வது வாக்குசாவடி என 10 வாக்குசாவடிகளில் மறு தேர்தல் நடத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu ,Chief Electoral Officer , Election Commission , India, 10 Polls, re-recording
× RELATED தேசிய சராசரியைவிட தமிழகத்தில்...