திமுக பகுதி செயலாளர் வீட்டில் குண்டு வீசிய எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி கைது: காவல்நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

சென்னை: மக்களவை தேர்தலில் பாமகவினரின் பணப்பட்டுவாடாவை தடுத்த திமுக பகுதி செயலாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டதை கண்டித்து உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். 18ம் தேதி நடந்த மக்களவை தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாமக சார்பில் சாம்பால் போட்டியிட்டார். இத்தொகுதிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் வாக்காளர்களுக்கு அமமுக, பாமக மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் பணப்பட்டுவாடா செய்தனர்.

அண்ணாநகர் பகுதி திமுக செயலாளர் பரமசிவன் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று, பணப்பட்டுவாடாவை தடுத்தனர். இதுகுறித்து அமைந்தகரை காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்தனர். இந்நிலையில் அண்ணாநகரில் உள்ள பரமசிவன் வீட்டில் மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் பரமசிவனின் கார் தீப்பிடித்து சேதமடைந்தது.

இதுகுறித்து டி.பி.சத்திரம் போலீசில் பரமசிவன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் 3 பைக்குகளில் வந்த 6 பேர் கும்பல், ஹெல்மெட் மற்றும் கர்சீப்பால் முகத்தை மூடியபடி வந்து குண்டுகளை வீசி விட்டு தப்பிச் செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன. அதை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை 5 மணியளவில் வில்லிவாக்கம் திருநகரை சேர்ந்த எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி சயித் (35) என்பவரை கைது செய்தனர். இவரிடம் தலைமறைவான கூட்டாளிகள் பற்றி விசாரித்து வருகின்றனர். சயீத்தை போலீசார் எவ்வித காரணமும் இல்லாமல் கைது செய்ததை கண்டித்து நேற்று மாலை 6 மணியளவில் சயித் மனைவி மற்றும் உறவினர்கள் வில்லிவாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: