சென்னையை வீழ்த்தி பெங்களூர் திரில் வெற்றி

பெங்களூரு: ஐபிஎல் லீக் கிரிக்கெட் ஆட்டத்தில் சென்னை அனியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி  பெங்களூர் திரில் வெற்றி பெற்றது. எம்.சின்னசாமி அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பார்திவ், கேப்டன் கோஹ்லி இருவரும் இன்னிங்சை தொடங்கினர். கோஹ்லி 9 ரன் மட்டுமே எடுத்து தீபக் சாஹர் வேகத்தில் டோனியிடம் பிடிபட. ஆர்சிபி அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. பார்திவ் - டி வில்லியர்ஸ் 2வது விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்தனர். டி வில்லியர்ஸ் 25 ரன் (19 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), அக்‌ஷ்தீப் நாத் 24 ரன் எடுத்து ஜடேஜா சுழலில் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய பார்திவ் அரை சதம் அடித்தார். அவர் 53 ரன் (37 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பிராவோ வேகத்தில் வாட்சனிடம் பிடிபட்டார். ஸ்டாய்னிஸ் 14, மொயீன் அலி 26 ரன் (16 பந்து, 5 பவுண்டரி), நேகி 5 ரன்னில் வெளியேறினர். ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்தது.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சனும் பிளிசிசும் களம் இறங்கினர். இந்நிலையில் வாட்சன் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து பிளிசிசுடன் ஜோடி சேர்ந்த ரெய்னா ரன் எதுவும் எடுக்காத நிலையில் அவுட் ஆனார். தொடர்ந்து பிளிசிஸ் 5 ரன், ஜதாவ் 9 ரன், ராயுடு 29 ரன், ஜடேஜா 11 ரன், பிராவோ 5ரன்கள் எடுத்து அவுட்டாகினர். இந்த நிலையில் 7 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 84 ரன்களுடன் களத்தில் இருந்த டோனி கடைசி பந்தை எதிர்கொண்டார். அப்போது தாகூர் ரன் அவுட்டானார். இதனால் சென்னை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை எடுத்தது. பெங்களூர் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: