இலவச காஸ் இணைப்பு வழங்கியதோடு சரி மீண்டும் விறகு அடுப்புக்கு மாறும் கிராமங்கள்

* காஸ் விலை உயர்வால் வாங்க தயக்கம்

* பலன் அளிக்கவில்லை உஜ்வாலா திட்டம்

புதுடெல்லி: இலவச காஸ் இணைப்பு பெற்ற கிராம மக்கள் பலர், அதை பயன்படுத்துவதற்கு பதில் மீண்டும் விறகு அடுப்பு மற்றும் வறட்டி பயன்பாட்டுக்கு மாறியுள்ளனர். காஸ் விலை உயர்வே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. கிராமங்களில் உள்ள ஏழை பெண்கள் அடுப்பு எரிக்க விறகு பயன்படுத்துகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசடைவதோடு, நுரையீரல், சுவாச கோளாறுகளும் ஏற்படுகின்றன. இதில் இருந்து பெண்களை மீட்கும் வகையில் உஜ்வாலா திட்டத்தை 2016ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. 2019ம் ஆண்டுக்குள் 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்குவதே இதன் நோக்கம் என மத்திய அரசு அறிவித்தது. பின்னர் இந்த இலக்கு 8 கோடியாக உயர்த்தப்பட்டது.

கடந்த மாதம் வரை இந்த திட்டத்தின் கீழ் 7.19 கோடி பேருக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 31.45 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த, வசதி உள்ளவர்கள் தங்களது காஸ் மானியத்தை விட்டுத்தர வேண்டும் என மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இதை ஏற்று 1.04 கோடி பேர் மானியத்தை விட்டுக்கொடுத்தனர். தமிழகத்தில் மட்டும் 6.6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். மேலும் மேற்கண்ட இலவச இணைப்புக்காக மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.4,751 கோடி வழங்கியுள்ளது.

இதனால், கரி, விறகு அடுப்பு பயன்படுத்தும் பழக்கம் மலையேறிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக கிராம மக்கள் பலர் காஸ் அடுப்பு பயன்படுத்துவதையே மறந்து விட்டனர். ஒரு புறம் மானியத்தை விட்டுத்தர வேண்டுகோள் விடுத்து வரும் மத்திய அரசு, மானியச்சுமையை குறைக்க காஸ் விலையை மாதம் சராசரியாக 2 ரூபாய் வீதம் உயர்த்தி வந்துள்ளது. சென்னையில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோகத்துக்கான மானிய சிலிண்டர் ரூ.483.74க்கு விற்கப்படுகிறது. மானியமற்ற சிலிண்டர் ரூ.722க்கு விற்கப்படுகிறது. மற்ற நகரங்களில் விலை மாறுபடும்.

ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும். இருந்தாலும் அவற்றை சந்தை விலையில்தான் வாங்க வேண்டும். மானிய விலை போக எஞ்சிய தொகை வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். ஆனால், ஏழை கிராம மக்களுக்கு இதை பற்றி தெரிவதில்லை. அன்றாடங்காய்ச்சியான அவர்கள் சந்தை விலையை கொடுத்து சிலிண்டர் வாங்க முடியாமல் அல்லல்படுகின்றனர். இதுதொடர்பாக பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் கிராமங்களில் சர்வே எடுக்கப்பட்டது. இதில் 98 சதவீதம் ஏழை குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்பு உள்ளது.

ஆனால், இவர்கள் விறகு அடுப்பு, வறட்டி, சுள்ளிகள் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. அதாவது, 27 சதவீதம் பேர் மட்டுமே காஸ் இணைப்பை பயன்படுத்துகின்றனர். 36 சதவீதம் பேர், காஸ் இணைப்பு இருந்தும் விறகு அடுப்பு மற்றும் சுள்ளிகளை பொறுக்கி வந்து சமையலுக்கு பயன்படுத்துகின்றனர் என அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது. பீகார், ஜார்கண்டில் 20 சதவீதத்துக்கும் கீழ்தான் சமையல் காஸ் பயன்பாடு உள்ளது.

பல கிராமங்களில் முதலில் ஓரிரு சிலிண்டர்கள் பயன்படுத்தி விட்டு காஸ் அடுப்பை ஓரங்கட்டி வைத்து விட்டனர். பரம ஏழைகளாக வாழும் கிராம மக்களுக்கு காஸ் இணைப்பு கட்டுப்படி ஆகவில்லை. வங்கிக்கணக்கில் நேரடி மானியம் வருகிறது என்பதை பலர் அறிந்திருக்கவில்லை. அப்படியே தெரிந்தாலும், வங்கி பரிவர்த்தனைகள் செய்து பழக்கம் இல்லாததால் அந்த பணம் வங்கியிலேயே முடங்கிக் கிடக்கிறது.

மொத்தமாக பணம் கொடுத்து சிலிண்டர் வாங்குவது மலைப்பாக உள்ளதாலும், சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் இந்த திட்டம் நடைமுறை சாத்தியமின்றி போய்விட்டது என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. ஏழைகளுக்கு ஏற்ற வகையில் இந்த திட்ட நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஆய்வு நடத்தியவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: