சில்லி பாயிண்ட்

* தோஹாவில் நடக்கும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஹிமா தாஸ், போட்டியின்போது முதுகு பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் பாதியில் விலகினார். இதனால் மகளிர் 4 X 400 மீட்டர் தொடர் ஓட்டம் மற்றும் கலப்பு 400 மீட்டர் ஓட்டத்தில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது.

* ஆசிய தடகளம் மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில் களமிறங்கிய இந்திய வீராங்கனை டூட்டி சந்த், தகுதிச் சுற்றில் 11.28 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து அரை இறுதிக்கு முன்னேறினார். அவர் தனது தேசிய சாதனையை (11.29 விநாடி) முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

* சீனாவின் நிங்போ நகரில் நடைபெறும் ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 49 கிலோ எடைபிரிவில் களமிறங்கிய இந்திய வீராங்கனை மீராபாய் சானு (24 வயது), வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் நழுவவிட்டார். அவர் ஸ்நேட்ச் முறையில் 86 கிலோ மற்றும் கிளீன் & ஜெர்க் முறையில் 113 கிலோ என மொத்தம் 199 கிலோ தூக்கி 4வது இடம் பிடித்தார். சீனாவின் ஸாங் ரோங்கும் 199 கிலோ தூக்கிய நிலையில் (88 கிலோ + 111 கிலோ), புதிய விதிகளின்படி ஸ்நேட்ச் முறையில் சானுவை விட அதிக எடை தூக்கியிருந்ததால் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை முத்தமிட்டார்.

* ஆசிய பளுதூக்குதல் ஆண்கள் 67 கிலோ எடை பிரிவில் களமிறங்கிய இந்திய வீரர் ஜெரிமி லால்ரின்னுங்கா (16 வயது, மிசோரம்), உலக இளைஞர் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் சாதனைகளை தகர்த்து அசத்தினார். அவர் ஸ்நேட்ச் முறையில் 134 கிலோ மற்றும் கிளீன் & ஜெர்க் முறையில் 163 கிலோ என மொத்தம் 297 கிலோ தூக்கி பி பிரிவில் 2வது இடம் பிடித்தார். ஜெரிமி கடந்த ஆண்டு அர்ஜென்டினாவில் நடந்த யூத் ஒலிம்பிக்சில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

* பாங்காக்கில் நடக்கும் ஆசிய பாக்சிங் தொடரில் இந்தியாவின் ஷிவா தாபா, சரிதா தேவி, அமித் பாங்கல், நிகாத் ஜரீன், ஆஷிஷ் ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

* சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடரின் பைனலில் 1-0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்திய சர்வீசஸ் அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. லூதியானாவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சர்வீசஸ் வீரர் விகாஷ் தாபா வெற்றி கோல் அடித்தார். இந்த தொடரில் சர்வீசஸ் அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் கோப்பையை முத்தமிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: