×

பெடரேஷன் கோப்பை டென்னிஸ் பைனலில் ஆஸ்திரேலியா: ஆஷ்லி பார்தி அசத்தல்

பிரிஸ்பேன்: பெடரேஷன் கோப்பை மகளிர் டென்னிஸ் தொடரின் உலக பிரிவு பைனலில் விளையாட, ஆஸ்திரேலிய அணி 26 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதி பெற்றுள்ளது. பிரிஸ்பேன், பேட்ரிக் ரேப்டர் அரங்கில் நடந்த அரை இறுதியில் பெலாரஸ் அணியுடன் மோதிய ஆஸ்திரேலியா 3-2 என்ற கணக்கில் போராடி வென்றது. ஒற்றையர் ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்தி 2 வெற்றிகளையும், பெலாரஸ் வீராங்கனைகள் விக்டோரியா அசரென்கா, அரினா சபலென்கா தலா ஒரு வெற்றியையும் பெற்றதால் 2-2 என சமநிலை நிலவியது. இதைத் தொடர்ந்து, கடைசியாக நடந்த பரபரப்பான இரட்டையர் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்தி - சமந்தா ஸ்டோசர் ஜோடி 7-5, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் பெலாரசின் விக்டோரியா அசரென்கா - அரினா சபலென்கா ஜோடியை வீழ்த்தியதை அடுத்து ஆஸி. அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி பைனலுக்கு முன்னேறியது.

இத்தொடரில் ஆஸி. வீராங்கனை ஆஷ்லி பார்தி தான் களமிறங்கிய 3 போட்டிகளிலும் வெற்றியை வசப்படுத்தி அசத்தினார். பிரான்ஸ் - ரோமானியா இடையே நடக்கும் மற்றொரு அரை இறுதியில் வெற்றி பெறும் அணியுடன் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியில் மோதும். இந்த போட்டி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும். கடைசியாக 1993ல் பெடரேஷன் கோப்பை பைனலுக்கு தகுதி பெற்றிருந்த ஆஸ்திரேலியா, 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Australia ,tennis final ,Federation Cup ,Ashley Bharti , Federation Cup Tennis, Australia, Ashley Bharti
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...