×

வார்னர் - பேர்ஸ்டோ அதிரடி...... நைட் ரைடர்சை விரட்டியது சன்ரைசர்ஸ்

ஐதராபாத்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கொல்கத்தா அணியில் ராபின் உத்தப்பா, குல்தீப் யாதவ், பிரசித் கிரிஷ்ணா நீக்கப்பட்டனர். ஆந்திராவை சேர்ந்த இடது கை வேகப் பந்துவீச்சாளர் பிரித்வி ராஜ் அறிமுக வீரராக இடம் பெற்றார். கொல்கத்தா தொடக்க வீரர்களாக கிறிஸ் லின், சுனில் நரைன் களமிறங்கினர். எடுத்த எடுப்பிலேயே இருவரும் அதிரடியில் இறங்க, கேகேஆர் ஸ்கோர் டாப் கியரில் எகிறியது. கலீல் அகமது வீசிய 3வது ஓவரின் முதல் 3 பந்துகளையும் 4, 4, 6 என விளாசித் தள்ளிய நரைன், அடுத்த பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். அவர் 8 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 25 ரன் எடுத்தார். கொல்கத்தா அணி 2.4 ஓவரில் 42 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்து வந்த ஷுப்மான் கில் 3, நிதிஷ் ராணா 11 ரன்னில் பெவிலியன் திரும்ப, கேப்டன் தினேஷ் கார்த்திக் 6 ரன் மட்டுமே எடுத்து பரிதாபமாக ரன் அவுட்டானார். கொல்கத்தா அணி 73 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து சரிவை சந்தித்தது. இந்த நிலையில், கிறிஸ் லின் - ரிங்கு சிங் ஜோடி 5வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 51 ரன் சேர்த்தது.

ரிங்கு சிங் 30 ரன் (25 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), கிறிஸ் லின் 51 ரன் (47 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். ரஸ்ஸல் 9 பந்தில் 2 சிக்சருடன் 15 ரன் விளாசி விடைபெற்றார். சாவ்லா 4 ரன்னில் ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன் குவித்தது. பிரித்வி ராஜ் (0), கரியப்பா 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் கலீல் அகமது 3, புவனேஷ்வர் 2, சந்தீப், ரஷித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் களமிறங்கியது. டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ இருவரும் துரத்தலை தொடங்கினர். பேர்ஸ்டோ 1 ரன் எடுத்திருந்தபோது பிரித்வி ராஜ் பந்துவீச்சில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை எல்லைக் கோட்டருகே நின்றிருந்த கரியப்பா நழுவவிட்டார். அந்த பந்து பவுண்டரியாகவும் அமைந்தது.

இதன் பிறகு வார்னர் - பேர்ஸ்டோ ஜோடி அடித்து விளையாடி ரன் சேர்க்க, சன்ரைசர்ஸ் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருவரும் தலா 28 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.2 ஓவரில் 131 ரன் சேர்த்தது. வார்னர் 67 ரன் (38 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி பிரித்வி ராஜ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். பியுஸ் சாவ்லா வீசிய 15வது ஓவரின் கடைசி 3 பந்துகளையும் பேர்ஸ்டோ 4, 6, 6 என விளாசித் தள்ள, சன்ரைசர்ஸ் 15 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து அபாரமாக வென்றது. பேர்ஸ்டோ 80 ரன் (43 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), வில்லியம்சன் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பந்துவீச்சில் அசத்திய கலீல் அகமது ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sunriseers ,Night Riders , Warner, Bairstow, knight Riders, SRH
× RELATED பந்துவீச்சாளர்கள் அசத்தலில் சன்ரைசர்ஸ் அபார வெற்றி