×

ராகுல் போட்டியிடும் வயநாடு உட்பட 115 மக்களவை தொகுதியில் நாளை 3ம் கட்டத் தேர்தல்: நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் போட்டியிடும் வயநாடு உள்பட 14 மாநிலங்களில் உள்ள 115 மக்களவை தொகுதிகளுக்கான 3ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜ கூட்டணியும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 2 கட்டத் தேர்தல் முடிந்து விட்டது. கடந்த 11ம் தேதி 91 தொகுதிகளுக்கும், கடந்த 18ம் தேதி 95 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலின்போது ஆந்திரா, தெலங்கானா அருணாசல பிரதேசம், அசாம், பீகார் உள்பட பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து 2ம் கட்டமாக தமிழகத்தில் 38 தொகுதிகளில் (வேலூர் தவிர) கடந்த 18ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அப்போது புதுச்சேரி மக்களவை தொகுதி மற்றும் தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.

இதையடுத்து, நாளை கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகள், கர்நாடகாவில் 14 தொகுதிகள், குஜராத்தில் 26, கோவாவில் 2 தொகுதிகள் உட்பட 14 மாநிலங்களில் உள்ள 115 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்துடன் தென்மாநிலங்களில் மக்களவை தேர்தல் நிறைவடைகிறது. இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் கேரளாவின் வயநாடும் இடம் பெற்றுள்ளதால் தேசிய அளவில் 3ம் கட்ட தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 3ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. முன்னதாக குஜராத்தில் பிரதமர் மோடி நேற்று இறுதி கட்டபிரசாரத்தில் ஈடுபட்டார். நாளை வாக்குப்பதிவு நடைபெற இருப்பதை முன்னிட்டு, தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றம் நிலவும் பகுதியில் துணை ராணுவப்படையும் குவிக்கப்பட்டுள்ளன. நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குபதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலுடன் ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul ,constituency ,phase ,Wayanad-Wayanad ,Lok Sabha , Rahul, Wayanad, Lok Sabha constituency, election
× RELATED சாதாரண தேர்தல் இல்லை அரசியலமைப்பு,...