×

ஈஸ்டர் பண்டிகை முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி : தியாகத்தின் மறுவுருவமான இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புனித நாளில், உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும், சகோதரத்துவம் தழைக்கட்டும் என்று இறைவனை பிரார்த்தித்து, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி: நியாயமும், சத்தியமும், தியாகமும் என்றைக்கும் மரிப்பதில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே இயேசுபிரானின் உயிர்த்தெழுதல் நிகழ்வு உலகளாவிய கிறிஸ்தவ பெருமக்களால் நம்பப்படுகிறது. இந்த ஈஸ்டர் நன்னாளில் நாட்டின் மத, இன, மொழி, வேறுபாடுகள் மறைந்து பகைவர்களுக்கும் அருளும் பண்பு மனிதர்களிடையே மிளிர்ந்து அனைவரும் அமைதி, சமாதானத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நெஞ்சில் உறுதியாக ஏற்போம்.மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் கவலையோடும், துன்பத்தோடும் அழிவின் பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கின்ற மக்களுக்கு இந்நாள் நம்பிக்கை ஊட்டுகின்றது. அச்சத்தைத் தள்ளி, எழுச்சியின் உச்சத்தை அடையும் வகையில் அமைந்துள்ளது. ‘நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை ஒருவனின் தாய் அவனைத் தாங்குவது போல, நான் உன்னைத் தாங்குவேன்’ என்ற உறுதியைத் தரக்கூடிய இந்நாளில், மக்கள் இடையே சமய நல்லிணக்கமும், வாழ்வில் மறுமலர்ச்சியும் ஏற்படக்கூடிய வகையில் அமைந்திட, கிறித்துவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தீயவர்களால் சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுபிரான் உயிர்த்தெழுந்து வந்தது கிறித்தவர்களுக்கு எத்தகைய மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் அளித்ததோ, அதேபோன்ற ஆனந்தம் அடுத்த 33 நாட்களில் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்கவிருக்கிறது. அந்த நாளில் தீயவர்கள் வீழ்வது உறுதியாகி விடும். தமிழகம் என்றால் வளர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றின் அடையாளமாக பார்க்கப்பட வேண்டும். தமிழக மக்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர வேண்டும். அதற்காக இயேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்த நாளில் அனைத்துத் தரப்பினரும் உறுதியேற்றுக் கொள்வோம்.இதைப் போன்று, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், சமத்துவ மக்கள் கழகம் தலைவர் என்.நாராயணன், அனைத்திந்திய எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்ற கழக தலைவர் எம்ஜிஆர் நம்பி, தலித் முன்னேற்ற கழக தலைவர் அன்பின் பொய்யாமொழி, இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி, தமிழ் மாநில கட்சி தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் மற்றும் நிலத்தரகர்கள் நலச்சங்க தலைவர் விருகை கண்ணன், தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன், தமிழக விடுதலைக் கட்சித் தலைவர் முருகவேல்ராஜன், நாடார் மக்கள் சக்தி தலைவர் ராக்கெட் ராஜா, அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் நலச்சங்க கூட்டமைப்பின் தலைவர் ஏ.ஹென்றி, திராவிட மனித சங்கிலி இயக்க தலைவர் செங்கை பத்மநாபன், காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் ஈசிஆர். சரவணன், விஜிபி குழுமத்தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் ஆகியோரும் ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Easter ,party ,leaders , Easter Festive Chief, congratulate,political party leaders
× RELATED உடல் நலம் தேறினார் போப் பிரான்சிஸ் தலைமையில் ஈஸ்டர் ஞாயிறு