வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ பொதுமக்களின் சாலை மறியலால் வாலிபர் அதிரடி கைது: தண்டராம்பட்டு அருகே பரபரப்பு

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அருகே வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ பதிவிட்ட வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து  நேற்று மாலை போலீசார் வாலிபரை கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே உள்ள பறையம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முரளி(32). இவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை பற்றி தரக்குறைவாக  பேசி வீடியோ ஒன்றை கடந்த 19ம் தேதி சமூக வலைதளங்களில் பதிவிட்டாராம். சிறிதுநேரத்தில் இந்த வீடியோ வைரலாக பரவியது. இதனால், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் அவதூறு வீடியோவை  வெளியிட்ட முரளியை கைது செய்ய வலியுறுத்தி நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் காட்டாமுந்தி பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து டிஎஸ்பிகள் ஹேமசித்ரா, அண்ணாதுரை மற்றும் தச்சம்பட்டு போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘சமூக வலைதளங்களில் எங்கள் சமூகத்தை பற்றி அவதூறு வீடியோவை பதிவிட்ட  வாலிபரை கைது செய்தால்தான், மறியலை கைவிடுவோம்’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து விடியற்காலை 4 மணி வரை விடிய, விடிய சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 6 மணிநேரம்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வாலிபர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில், நேற்று மாலை வெறையூர் போலீசார்  அவதூறு பரப்பிய முரளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: