மத்திய அரசின் கைப்பாவையாக உள்ளதால் பல்லில்லா அமைப்பாகி விட்டதா தேர்தல் ஆணையம்?

* தேர்தலில் ஆறாய் பாய்கிறது பணம்

* நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சம்
Advertising
Advertising

* சுப்ரீம் கோர்ட் பலமுறை கண்டனம்

புதுடெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்பும், நாட்டில் ரூபாய் கரன்சி புழக்கம் கொடிகட்டிப்பறக்கிறது என்பதற்கு மக்களவை தேர்தலில் பறிமுதல் செய்யப்படும் பல நூறு கோடி ரூபாய் பணமே நிரூபித்து விட்டது. தேர்தலில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பல்லில்லா அமைப்பாகி விட்டதா என்ற பெரும் சந்ேதகத்தை ஏற்படுத்தியுள்ளது.    பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், பிரதமர் மோடி எதிர்பார்த்தது போல, நாட்டில் மக்களிடம் ரொக்கப் புழக்கம் குறைந்திருக்க வேண்டும். 98 சதவீதம் பணம் வங்கிக்கணக்குக்குள் வந்து விட்டது. கறுப்பு பணம் வெளியில் இல்லை என்று பிரதமர் மோடியும் சரி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் சரி மார்தட்டி சொல்லி வந்தனர்.   ஆனால், அப்படி  எதுவும் நடக்கவில்லை. கறுப்பு பணம் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு இ்தோ ஒரு சிறிய புள்ளி விவரம்: கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்புக்கு பின் எல்லா ரொக்க பணமும் வங்கிக்குகள் வந்து விட்டது என்று மத்திய அரசு சொன்னது. அதன் பின், 2016ம்  ஆண்டு நவம்பர் மாதம் பொதுமக்களிடம் மொத்த பணப்புழக்கம் 17 லட்சத்து 97 ஆயிரம் கோடி ரூபாய் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.   கடந்த 2014ம்  ஆண்டு மக்களவை தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் அதாவது, மார்ச் 7 ம் தேதி அன்று எடுத்த கணக்கின்படி, மக்களிடம் மொத்த பணப்புழக்கம் 12 லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய்.

* சரி, இப்போது மக்களவை ேதர்தல் அறிவிப்புக்கு 5 நாளுக்கு பின் என்ன கதை தெரியுமா? பொது மக்களிடம் உள்ள பணப்புழக்கம் மொத்தம் 21 லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய்.   கையில் உள்ள பணம், வங்கியில் டெபாசிட் செய்த பணம், பிடிபட்ட பணம் என்று எல்லாம் சேர்த்து  தான் இந்த கணக்கு என்கிறது ரிசர்வ் வங்கி.

* இப்போது புரிந்திருக்குமே...பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த எந்த வகையிலும் கைகொடுக்கவில்லை என்பதுடன், தேர்தல் சமயத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் வெள்ளமாக பாய்கிறது என்பது. கடந்த தேர்தல்களை எல்லாம் விழுங்கி விடும் அளவுக்கு இந்த மக்களவை தேர்தலின் போது பணம்  வெளியே வந்து கொண்டிருக்கிறது. இதுவரை தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் சேர்த்து மொத்தம் 2 கட்ட தேர்தல்கள் தான் நடந்துள்ளது. இன்னும் 5 கட்டங்களாக மற்ற தொகுதிகளில் தேர்தல் நடக்க வேண்டும்.

  அடுத்த மாதம் 19ம் தேதி கடைசி கட்ட தேர்தல் முடிந்தவுடன் 23 ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகி விடும். இந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பல மாநிலங்களிலும் பணம் ஆறாய் பாய்ந்து கொண்டிருக்கிறது. கட்சிகளிடம் நேரடியாக பணம் வெளியே வராது என்றாலும், கட்சி சார்ந்தவர்கள், தொழிலதிபர்கள் என்று பலரிடம் இருந்தும் கட்சிப்பணிகளுக்காக, பிரசாரத்துக்காக, வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் தினமும் பாய்ந்தபடித்தான் உள்ளது.  கடந்த 2014 மக்களவை தேர்தலை விட இந்த முறை இரு மடங்கு அளவுக்கு அதாவது 2500 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.   ஒரு பக்கம் தேர்தல் கமிஷனுடன் இணைந்து வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என்று பலரும் கண்காணித்து பணத்தை, பொருட்களை மடக்கி பறிமுதல் செய்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் பல வழிகளில் பணம் மூட்டைமூட்டையாக வந்த வண்ணம் தான் உள்ளன. இவற்றை பறிமுதல் செய்வதை பார்த்தால், பணமதிப்பிழப்பு எந்த அளவுக்கு தோல்வி அடைந்த நடவடிக்கை  என்று தெளிவாகும்.   வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டம் போட்டு தேர்தல் சமயத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் வீடுகளில் மட்டும்  ரெய்டுகளை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுகிறது. இது உண்மை தானா? மத்திய அரசின் மறைமுக நடவடிக்கைகளை வைத்து எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. மேலும், தேர்தல் கமிஷனை பல்லில்லா அமைப்பு, அதை அரசு தான் ஆட்டிப்படைக்கிறது என்ற கண்டனமும் ஆரம்பம் முதலே உள்ளது.   இது உண்மை தான் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். ‘தேர்தல் செலவினங்களை கண்காணிக்க தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறை உட்பட புலனாய்வு அமைப்புகள் உதவுகின்றன.  இப்படி இயங்கும் போது, பழிவாங்கல் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. இதற்கு தெரிந்தோ, தெரியாமலோ தேர்தல் கமிஷன் பகடைக்காய் ஆகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

 தேர்தல் கமிஷன் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் முறை நீதிபதிகளை நியமிப்பது போன்றதில்லை. சட்ட  அமைச்சகம் சிலரின் பெயர்களை ஆணையர்களுக்கு பரிந்துரைத்து பிரதமருக்கு அனுப்புகிறது. பிரதமர், அதை ஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதல் பெறுகிறார். இதுவே ஆளும் கட்சி, தேர்தல் கமிஷனை துஷ்பிரயோகம் செய்ய வழிவகுக்கிறது. தங்களுக்கு வேண்டிய ஆணையர்களை நியமிக்க வைக்கிறது என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர்.   உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியை நியமிக்க, பிரதமர், எதிர்கட்சி தலைவர் உட்பட்ட குழு இருக்கும் போது, ஏன், தன்னாட்சி அமைப்பான சிபிஐ, மத்திய லஞ்ச கண்காணிப்பு ஆணையம் மற்றும் தேர்தல் கமிஷன் தலைவர்களை தேர்வு செய்ய குழுவை அமைக்கலாமே என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.   தேர்தல் ஆணையம் பல்லில்லா அமைப்பு என்று சுப்ரீம் கோர்ட்டே கூறிவிட்டது. வெறுப்பு அரசியலை பரப்பும் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையத்தை உத்தரவிட்டது. ஆனால், சமீபத்தில் தான், ஆணையம், வெறுப்பு பேச்சை பரப்பிய மத்திய  அமைச்சர் மேனகா காந்தி, அசம் கான், மாயாவதி,  உபி முதல்வர் யோகி  ஆதித்ய நாத் ஆகியோர் பிரசாரம் செய்ய இடைக்கால தடை விதித்தது.   இதை தேர்தல் கமிஷன் சொன்னபோது, ‘பரவாயில்லையே, ஒரு வழியாக தேர்தல் ஆணையத்துக்கு உள்ள அதிகாரத்தை கண்டுபிடித்து விட்டீர்களாக்கும்’ என்று குத்தலாக நீதிபதிகள் சொன்ன கருத்தை  தர்மசங்கடமாக ஏற்றது ஆணையம்.    இதுதவிர தேர்தல் பாண்டு வெளியீடு, கடைசி நிமிடத்தில் தேர்தல் அறிவிப்பு தாமதம்,  பிரதமர் மோடியின் அறிவிப்புகள் எல்லாம் சேர்த்து, தேர்தல் ஆணையம் தோல்வி  அடைந்து விட்டதாக குற்றச்சாட்டுகள் வெகுவாக பரவி விட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாக இருந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு பழிச்சொல்லை பெற்று விட்டது துரதிருஷ்டம் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகளே கவலை தெரிவிக்கின்றனர்.

என்னாச்சு பணமதிப்பிழப்பு?

*2014 மார்ச்,  மக்களவை தேர்தல் அறிவிப்பின் போது, மக்களிடம் மொத்த பணப்புழக்கம், ரிசர்வ் வங்கி கணக்கு படி, 12 லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய்.

* 2016ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், பொது மக்களின் பணம் 17 லட்சத்து 97 ஆயிரம் கோடி ரூபாய்.

* 2019 மக்களவை தேர்தல் அறிவிப்புக்கு பின், 21 லட்சத்து 74  ஆயிரம் கோடி ரூபாய்.

இதனால்...

* பணமதிப்பிழப்புக்கு பின் கறுப்பு பணம் ஒழியவில்லை.

* பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி என்பது மீண்டும் நிரூபணம்..

தமிழகத்தில் பெரும் தோல்வி

தமிழகத்தை பொறுத்தவரை, பல வகையில் இந்த முறை தேர்தல் ஆணையம் தோல்வி கண்டுவிட்டது. வருமானவரித்துறை அதிகாரிகளை வைத்து சோதனை செய்த விஷயங்களில் ஒளிவுமறைவு காட்டியது பெரும் பழியாக விழுந்துள்ளது. வாக்காளர்கள் கொத்துகொத்தாக ஆயிரக்கணக்கில் நீக்கப்பட்டது, பூத் ஸ்லிப் தராமல் மக்களை அலைக்கழித்தது, வாக்களிக்க முடியாமல் மக்களை தடுக்க  தமிழ்நாடு முழுக்க பஸ்களை ரத்து செய்தது போன்ற விஷயங்களும் தேர்தல் கமிஷன் மீது மக்களுக்கு நம்பிக்கை போகும் அளவுக்கு செய்து விட்டது என்றும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பாண்டு படுத்திய பாடு

 தேர்தலையொட்டி கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க வகை செய்யும் பாண்டுகளை வங்கி மூலம் வெளியிட்டது மத்திய அரசு. பாண்டுகளில் நான்கில் ஒரு பங்கு தொகை தான் எதிர்கட்சிகளுக்கு சென்றது. மற்ற மூன்று பங்கு பணம், ஆளும் பாஜவுக்கு தான் சென்றது. இதில் ஒளிவுமறைவு இருக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட், மே 31ம் தேதி யார் யார் பாண்டு வாங்கினர் என்பதை அறிக்ைக தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இதுவும் தேர்தல் கமிஷனுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: