×

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டவை திறப்பு விழா காணாமல் முடங்கிய கழிப்பிடங்கள்: தவிக்கும் மலைவாழ் மக்கள்

கோவை: கோவை பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட கழிப்பிடங்கள் திறப்பு விழா காணாமல் முடங்கி கிடக்கிறது. இதனால், மலைவாழ் மக்கள் தவிக்கின்றனர்.கோவை மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. குறிப்பாக, பொள்ளாச்சியில் 17-க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமம், வால்பாறையில் 17-க்கும் மேற்பட்ட கிராமம் வனப்பகுதிக்குள் உள்ளன. இதுபோன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள், திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பிட வசதி செய்துகொடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நிதியுதவியுடன் இவை கட்டப்பட்டு வருகிறது. பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை அருகே உள்ள வேட்டைக்காரன்புதூர் பாசன வாய்க்காலை ஒட்டி இருக்கும் அன்பு நகரில் 400-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு கழிப்பிட வசதி இல்லாமல், பொது இடங்களிலேயே மலம் கழிக்கின்றனர். இப்பகுதியில் இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாததால், திறந்தவெளியில் மலம் கழிக்க செல்லும்போது பாம்பு கடிக்கு ஆளாகின்றனர்.இதேபோல், ஆழியார் அணைக்கு அருகே, வால்பாறை சாலையை ஒட்டி இருக்கும் சின்னார்பதி மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இங்கு, விஷ பாம்பு மட்டுமின்றி, யானை, காட்டுப்பன்றி போன்ற மிருகங்களாலும் தாக்கப்படுகின்றனர். இப்பகுதியிலும் மின்சார வசதி இல்லை. இப்பகுதி மக்களின் சிரமத்தை உணர்ந்து, தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், திறப்பு விழா காணாமல் முடங்கி கிடக்கிறது.

மேட்டுப்பாளையம் நெல்லித்துறை மண்ணம் பகுதியில் மூன்று கழிப்பிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டு, இரண்டு கழிப்பிடம் பணி முடிந்து திறப்பு விழாவிற்காக ஆறு மாதங்களாக காத்திருக்கிறது. மூன்றாவது கழிப்பிடம், பாதி கட்டப்பட்ட நிலையில் அப்படியே கிடக்கிறது. இதுதவிர, எட்டு கழிப்பறைகள் கட்டப்பட்டு, பூட்டியே கிடக்கிறது. தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புகள் கொடுத்தால் பயன்பாட்டுக்கு வரும் என்ற நிலையில் உள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இவற்றை திறக்கக்கோரி இப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியும் பலன் இல்லை.தொண்டாமுத்தூர், ஆனைகட்டி, தோலம்பாளையம் போன்ற பகுதிகளிலும், மலைவாழ் மக்கள் பொதுஇடங்ளில் மலம் கழிக்க செல்லும்போது யானை தாக்கி உயிரிழக்கும் பரிதாபம் தொடர்கிறது. இப்பகுதியிலும் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கழிப்பறைகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு, வெறும் அறிவிப்போடு நிற்கிறது.பொள்ளாச்சி மற்றும் வால்பாறை பகுதிகளில் சின்னார்பதி, நவமலை, நாகுரூத்து, எரிமைப்பாறை, கோழிகமுத்தி, வில்லோனி, கூமாட்டி, கவர்க்கல், உடும்பபாறை, சங்கரன் குடி, நல்லமூடி பூஞ்சோலை உள்ளிட்ட 17 வன கிராமங்களில் 3000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கழிப்பிட வசதி இல்லாமல், தமிழகத்திலேயே, அதிகளவு மக்கள், பாம்பு கடி படுவது இப்பகுதிகளில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திறந்தவெளியில் மலம் கழிக்காத மாநிலமாக தமிழகம் 2018 டிசம்பருக்குள் உருவாகும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், கோவை மாவட்டத்தில், பல கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பது வேதனையிலும் வேதனை என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். திறந்த வெளியில் மலம் கழிக்காதீர்கள் என கிராமந்தோறும் தகவல் பலகை மட்டும் வைத்தால் போதாது. இவற்றை செயல்படுத்த வேண்டும், இல்லையேல் போராட்ட களத்தில் இறங்கவும் தயார் என இப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Poor India Opening Ceremony Opening Ceremonies: Missing Tunnels , Poor,India Opening,Ceremony Opening,Ceremonies, Missing Tunnels
× RELATED பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை